News Just In

6/23/2022 06:27:00 AM

மட்டக்களப்பு மேற்கில் உள்ள பாடசாலைகளின் பரிதாப நிலை! கவலையில் பெற்றோர்கள்!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவு குறைவினால் கற்றல் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

நாட்டின் தற்போதைய எரிபொருள் பிரச்சினையின் மத்தியில் கடந்த திங்கட்கிழமை (20-06-2022) பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 50% ஆன ஆசிரியர்களே குறித்த வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு கடமைக்கு வருகை தந்தனர்.

மேலும், சில பாடசாலைகளில் ஒரு ஆசிரியர் 1 – 5 வரையான மாணவர்களுக்கும், இன்னும் ஒரு ஆசிரியர் 6 – 11 வரையான மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் 75%க்கும் அதிகமானவர்கள் வெளிவலயங்களில் வதிவிடத்தினை கொண்டர்வர்களாக உள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை வதிவிடமாக கொண்டவர்கள் 25%மானவர்களாகவே இருக்கின்றனர்.

அவர்களில் பாடசாலைக்கும் தமது வதிவிடத்திற்குமான 5km க்கும் குறைவான தூரத்தில் உள்ளவர்கள் 5%மானவர்களே.

வெளிப்பிரதேசங்களில் இருந்து குறித்த வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு செல்வதற்கான பொதுப்போக்குவரத்தும் மிகக்குறைவே. அவ்வாறு பொதுப்போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு தனி வாகனங்களிலேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறான கஷ்ட, அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்லாமையினால் பாடசாலை கல்வியை மட்டும் நம்பியுள்ள மட்டக்களப்பு மேற்கு மாணவர்கள் வெகுவாக பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் நடைபெறவிட்டாலும் தனியார் வகுப்புகளிலாவது கற்றுக்கொள்வர். ஆனால் மட்டு மேற்கில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் சூனியமாகவே ஆக்கப்படும்.

இன்றைய சூழலில் அனைவருக்கும் எரிபொருள் தேவை உள்ளது அதனை மறுதலிக்க முடியாது. ஆனாலும் யுத்தம், குண்டுவெடிப்பு, கொரோனா தற்போது பொருளாதார நெருக்கடிகளால் தொடர்ச்சியாக கல்வியில் பாதிப்பினை மாணவர்கள் எதிர்கொள்வதினால் எதிர்காலத்தில் அறிவாற்றல்மிக்க சமூகத்தினை கட்டியெழுப்ப முடியாமல் போகும்.

இதனால் நாட்டில் இன்னமும் பின்தங்கிய துறையாக கல்வி விளங்கும் என்பதுடன் சமூகத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதற்காக உயர்பீடத்தில் உள்ளவர்கள் மாணவர்களின் கல்வி நிலைமை தொடர்பில் அதிக கவனமெடுக்க வேண்டும். இல்லாதுவிடின் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்பதுடன், ஒழுக்கமற்ற சமூகம் ஒன்று உருவாவதற்கு வாய்ப்பாகிவிடும்.

நாட்டில் இரவு பகலாக வீதிகளில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர் இந்நிலைமை வேதனையே. இவ்வேதனையான நிலைகள் தொடர்ச்சியாக நடந்தேறாமல் இருக்க கல்வித்துறை வளர வேண்டும்.

அதற்காக அடிப்படை கல்வியை புகட்டுகின்ற பாடசாலைகளை எவ்வித தடையுமின்றி முன்கொண்டு செல்ல ஒவ்வொரு மட்டத்தினரும் இத்தருணத்தில் சிந்திக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டிருக்கும் மட்டு மேற்கு மாணவர்களின் கல்வியை முன்கொண்டு செல்ல முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் வழமை போன்று கற்பித்தலை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இதற்கு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இல்லையாயின் ஒழுங்கு முறையான பயிரினை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன், ஒரு சமூகத்தினை அழித்து பாவம் எல்லோரையும் வந்துசாரும்.

No comments: