News Just In

6/06/2022 06:35:00 AM

ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வட கொரியா!

வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

ஆனாலும் கடும் பொருளாதார நெருக்கடி, கொரோனா தொற்று பரவல் ஆகியவற்றுக்கு இடையேயும் இந்த ஏவுகணை சோதனையை மட்டும் அந்த நாடு நிறுத்தி விடவில்லை. நேற்று ஒரே நாளில் 8 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது.

தலைநகர் பியாங்யாங் அருகேயுள்ள சுனான் பகுதியில் இருந்து 35 நிமிடங்களில் இந்த ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய கூட்டுப்படைத்தலைவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் இந்த ஏவுகணைகள் எவ்வளவு தொலைவுக்கு பறந்தன என்பதை தென் கொரிய ராணுவம் தெரிவிக்கவில்லை.

ஆனால் வடகொரியா அதிகளவிலான ஏவுகணைகளை ஏவுவதால், அந்த நாட்டின் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. அமெரிக்காவின் விமானம்தாங்கி போர்க்கப்பல் ரொனால்டு ரீகன், பிலிப்பைன்ஸ் கடலில் தென்கொரியாவுடன் 3 நாள் கூட்டு போர் பயிற்சியை நடத்தி முடித்து ஒரு நாள் ஆன நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை வடகொரியா எடுத்திருப்பது அதிரவைப்பதாக அமைந்துள்ளது.

தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன. இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.

தென்கொரிய அதிபர் யூன்சுக் யோல் அலுவலகம், "தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கிம் சுங் ஹான், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக்கூட்டி வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து விவாதிப்பார்" என தெரிவித்துள்ளது.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் பற்றிய தகவல்களை சேகரிக்க அதிகபட்ச முயற்சிகள் எடுக்கவும், விமானங்கள், கப்பல்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.

No comments: