அரசியல் ஆதரவு காரணமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள நீக்குமாறும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரி பதவிகளுக்கு மீண்டும் விண்ணப்பங்களை பெற்று தகுதியான அதிகாரிகளை நியமிக்குமாறும், அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இரு வாரங்களுக்குள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளுமாறும் அவற்றின் மிகவும் திறமையான பொலிஸ் அதிகாரிகளை பொறுப்பதிகாரிகளாக தெரிவு செய்து, அது சம்பந்தமான அறிக்கையை தனக்கு வழங்குமாறும் அமைச்சர், பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டிலுள்ள 184 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளில் 182 பேர் அந்த பதவிகளுக்கு தகுதியற்ற அதிகாரிகள் என பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன ஒரு மாதத்திற்கு முன்னர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தனது பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாது, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 3 ஆம் திகதி வரையான காலத்தில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அதிகாரிகளில் 126 பேர் எவ்வித நேர்முகப் பரீட்சையும் நடத்தப்படாமல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் மூன்று பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் நேர்முகப் பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
மேலும் இந்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளில் 130 பேருக்கு போதைப் பொருள் வியாபாரிகளுடன் நேரடியான தொடர்புள்ள நபர்கள் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த அந்த கடிதம் அண்மையில் ஊடகங்களுக்கு கிடைத்திருந்ததுடன் அது சம்பந்தமான செய்திகள் பிரசுரமாகி இருந்தன.
இந்த செய்திகள் குறித்து அமைச்சர் டிரான் அலஸ் சிறப்பு கவனத்தை செலுத்தியுள்ளார்.
அதேவேளை பொலிஸ் மா அதிபரின் கடிதத்திற்கு பதில் அனுப்பியிருந்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) ஜகத் அல்விஸ், பொலிஸ் அதிபரின் பரிந்துரைகளுக்கு அமையவே தான் நியமனங்களை வழங்கி இருந்தாக கூறியிருந்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டிரான் அலஸ்,
பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தொடர்பான விடயத்தில் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் உரிய நேர்முகப் பரீட்சைகளை நடத்தி தகுதியான திறமையான அதிகாரிகளை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
No comments: