இலங்கையுடன் தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி தமது கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நிகழ்நிலையின் ஊடாக இம்மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டத்தின் பிரகாரம், இலங்கையுடனான தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன் இவை ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு தொடரும்.
அதன்மூலம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தயாரான நிலையில் இருக்கமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கையின் தற்போதைய நிலைவரங்களை உன்னிப்பாக அவதானித்துவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியம், தீவிரமடைந்துவரும் பதற்றநிலை மற்றும் வன்முறைகள் குறித்துக் கரிசனை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான முதற்கட்டப்பேச்சுவார்த்தைகள் கடந்த ஏப்ரல் மாதம் வொஷிங்கடனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமாகின.
இப்பேச்சுவார்த்தைகளின்போது தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கும் வெளிநாட்டுக்கையிருப்புப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு அவசியமான உதவிகளை வழங்குமாறு இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருக்கின்றது.
அதன்படி 300 மில்லியன் - 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் உறுதியளித்தது.
இந்த நிதி அடுத்த 4 மாதகாலத்திற்குள் உலகவங்கியின் ஊடாக இலங்கைக்குக் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: