தற்போது நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி நிலமைகளை எதிர்கொள்வதற்கும், மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை தடையின்றி முன்னெடுப்பதற்கும் மாநகர சபையுடன் கைகோர்க்க வருமாறு மட்டக்களப்பு மாநகருக்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரச-தனியார் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் மாநகர சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (26) மாநகர ஆணையாளர் நா.மதவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர், இவ்வாறு அழைப்பு விடுத்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியில் தனியார் துறையின் பங்களிப்பானது அளப்பரியது. தனியார் துறையினரின் பங்களிப்பு இல்லாமல் நிலையான அபிவிருத்தியை எட்ட முடியாது. அதன் அடிப்படையில் மாநகர சபையின் செயற்பாடுகளில் தனியார் துறையினரையும் பங்குதாரராக இணைத்து நிலையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்தக் கலந்துரையாடலானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பல மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தற்போது நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில், மாநகருக்குள் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ஒவ்வொரு நிதி நிறுவனங்களுடனும் பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.
இதன் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் தடையின்றி முன்னெடுக்க முடியும். எனவே மாநகர சபையுடன் கைகோர்க்க வருமாறு மட்டக்களப்பு மாநகருக்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைத்து வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபையினை இலங்கையில் ஓர் முன்னுதாரணமான சபையாகவும், அழகான நகரமாகவும் மாற்றியமைப்பதற்கு நிதி நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக பூங்காக்கள், சந்திகளை அழகுபடுத்தும் செயற்பாடுகளை இதன் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் இதன்போது மாநகர ஆணையாளர் நா.மதவண்ணன் கருத்து தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ்.லிங்கேஸ்வரன், மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதம கணக்காளர் திருமதி ஹெலன் சிவராஜா, பொறியியலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன் உள்ளிட்ட மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகருக்குள் வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.
No comments: