News Just In

5/23/2022 03:04:00 PM

துர்நாற்றம் குறித்து ஆராய டிரோன் கமரா உதவி : கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை



நூருள் ஹுதா உமர்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீசுகின்ற துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பகலிரவு வேளைகளில் திடீரென இத்துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பர் தற்போது வீசுகின்ற துர்நாற்றம் குறித்து ஆராய்வதற்காக இரு நாட்களாக களவிஜயம் செய்ததுடன், டிரோன் கமரா உதவியுடன் தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் வீசுகின்ற துர்நாற்றம் எங்கிருந்து வருகின்றது. எதனால் வருகின்றது என்பதை எந்தவொரு ஆதாரத்துடன் அறிய முடியவில்லை. இருந்த போதிலும், சுமார் 3 மணி நேரமாக சந்தேகிக்கப்படடுகின்ற இடங்கள், அதனைச் சூழவுள்ள பகுதிகள் யாவும் டிரோன் கமராவின் உதவியுடன் கண்கானிக்கப்பட்டு சில இடங்கள் சந்தேகத்தில் அடையாளப்படுத்தப்பட்டன.

பின்னர் இவ்வாறு அடையாளப்படுத்தபட்ட இடங்களை நோக்கி கால்நடையாகவும் நீர் நிலைகளிலுள்ள கழிவுகளை ஆராய்வதற்காக வள்ளங்களின் உதவியுடனும் கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி சென்று பார்வையிட்டார்.

இதன் போது அங்கு சந்தேகத்தில் அடையாளப்படுத்தபட்ட இடங்களில் கல்முனை, சாய்ந்தமருது மக்கள் அண்மைக்காலமாக அனுபவித்து வருகின்ற துர்நாற்றத்தை அடையாளங்காண முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பர், சாய்ந்தமருது, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அத்துடன், துர்நாற்றம் குறித்து இதுவரை காரணம் கண்டறியப்படாத நிலையில், பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையிலான சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை உயரதிகாரிகள் அடங்கிய குழுவினர் கள விஜயமொன்றை மேற்கொண்டதுடன், அப்பகுதியிலுள்ள தனியார் ஒருவரினால் நிர்வகிக்கப்படும் விலங்கறுமனையின் நிலைமையினையும் ஆராய்ந்துள்ளனர்.

எனவே, துர்நாற்றம் ஏற்படுவதற்கு யார் காரணமாக இருந்தாலும், அவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும்.
கல்முனை மாநகர முதல்வர் இதனை ஆய்வு செய்து துர்நாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து உரியவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கையெடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுள்ளனர்.


No comments: