கருங்கடலில் ரஷ்யாவின் 2 ரோந்து கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இருந்தபோதிலும், உக்ரைனை அடிபணிய வைக்கும் ரஷ்யாவின் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை.
மாறாக உக்ரைனை போலவே ரஷ்யாவும் இந்த போரில் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கருங்கடலில் இருந்து கடல் வழி தாக்குதலை தலைமையேற்று நடத்தி வந்த, ரஷ்யாவின் மோஸ்க்வா என்ற பிரமாண்ட போர்க்கப்பலை நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி கடலில் மூழ்கடித்ததாக உக்ரைன் இராணுவம் தெரிவித்தது.
ஆனால் அதை மறுத்த ரஷ்யா, போர்க்கப்பலில் தீப்பற்றி, அதனால் கடலில் மூழ்கியதாக தெரிவித்தது. இதில் ஒரு மாலுமி பலியானதாகவும், 20-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் ரஷ்ய இராணுவம் தெரிவித்தது. அவர்களின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.
இந்த நிலையில் கருங்கடலில் நேற்று ரஷ்யாவின் 2 ரோந்து கப்பல்களை டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் இராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி கூறுகையில்,
“இன்று காலை ஸ்மினி தீவு அருகே கருங்கடலில் ரஷ்யாவின் ராப்டார் பிரிவு ரோந்து கப்பல்கள் இரண்டை உக்ரைன் வீரர்கள் ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்தனர்” என்றார்.
No comments: