
மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை 10.05.2022 இரவு வன்முறைகளில் ஈடுபட்ட பிரதான நபர் உட்பட 12 பேரை கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் திங்கள்கிழமை 16.05.2022 தெரிவித்தனர். வன்முறைக் கும்பலில் சம்பந்தப்பட்ட மேலும் பலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பிரதான சந்தேக நபர் தனது அணியைச் சேர்ந்த ஏனையோரையும் வன்முறையில் ஈடுபடுமாறு கூவி அழைப்பது காணொளிக் காட்சியில் இருப்பதாகவும் இதன் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் மூன்று ஆடைத் தொழில்சாலைகளைச் சேதமாக்கியிருந்ததோடு முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் வாடகைக் கட்டிடமான அவரது அலுவலகம் அவரது சகோதரரின் வீடு சகோதரரின் புதல்வருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று ஆகியவற்றைத் தாக்கி தீயிட்டும் கொளுத்தியிருந்தனர்.
மூன்று ஆடைத்தொழில்சாலைகள் பலத்த சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. அங்கிருந்த அதி நவீன ஆடைத் தொழில் இயந்திராதிகள், மின் பிறப்பாக்கிகள், ஜன்னல் கண்ணாடிகள் என்பனவும் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் பலகோடி ரூபாய் பெறுமதியுள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுபற்றி முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் புன்னைக்குடா வீதியை அண்டி அமைந்துள்ள மூன்று ஆடைத் தொழில்சாலைப் பணியாளர்கள் சுமார் ஐந்நூறு பேரளவில் கடந்த வியாழக்கிழமை 12.058.2022 தமது ஆடைத் தொழில்சாலையை சேதமாக்கிய வன்முறையாளர்களைக் கைது செய்து செய்யுமாறு கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறாவூரிலுள்ள சர்வதேச தரத்திலமைந்த இந்த ஆடைத் தொழில்சாலைகளில் சுமார் 1600 தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் நேரடியாக தொழில் வாய்ப்புப் பெற்றிருக்கின்ற அதேவேளை சுமார் 5000 குடும்பங்கள் மறைமுக தொழில் வாய்ப்பின் மூலம் நன்மையடைந்து வந்ததாக அங்கு பணியாற்றுவோர் தெரிவிக்கின்றனர்.
புன்னைக்குடா வீதியிலுள்ள ஒரு ஆடைத் தொழில்சாலை மீண்டும் இயங்க முடியாதளவிற்கு சேதமாக்கப்பட்டுள்ளது.
No comments: