News Just In

4/28/2022 12:49:00 PM

இலங்கையில் தொடர் முடக்கத்திற்கான முதற்கட்ட எச்சரிக்கை!



நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் பொதுமக்களுக்கு அரச நிர்வாக சேவைகள் சங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு நாள் சேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதேவேளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் அந்தந்த பதவிகளை இராஜினாமா செய்ய விரும்பாமைக்கு எதிராக 1000 தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ரவி குமுதேஷ் அறிவித்திருந்தார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


அத்துடன் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டமாக மாற்ற வற்புறுத்தாது அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விரும்பிய முடிவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் மே 6ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலில் ஈடுபடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

என்றபோதும் அரசாங்கத்துக்கு எதிரான இன்றைய பொது பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி நடத்தப்படவுள்ள தேசிய நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு தமது சங்கம் ஆதரவளிக்கும் என தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனத் தலைவர் கெமுன விஜயரத்ன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேருந்துகள் வழமை போன்று செயற்படும் போதிலும் போக்குவரத்தில் ஈடுபடும் குறிப்பாக பணிகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதுடன் வீதியில் மக்கள் நடமாட்டம் பாரியளவில் குறைந்திருப்பதுடன், நாட்டின் பல பகுதிகள் முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments: