News Just In

4/06/2022 05:58:00 AM

பெரும்பான்மையை தக்கவைக்க பஷில் கடும் பிரயத்தனம்!


நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை வைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் சுயாதீனமாக இயங்குவார்கள் என இன்று(செவ்வாய்கிழமை) அறிவிக்கப்பட்ட 43 பேரில் மூவர், தாம் இன்னும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை என அறிவித்துள்ளனர்.

அருந்திக்க பெர்ணாண்டோ (அனுர பிரியதர்சன யாப்பா அணி), ரொஷான் ரணசிங்க (அனுர பிரியதர்சன யாப்பா அணி), கயான் (விமல் அணி) ஆகிய மூவரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அரசிலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ரிஷாட் கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவான முஷாரப் சுயாதீனமாக இயங்கப்போவதாக இன்று சபையில் அறிவித்தார்.

ஆனால் இசாக் ரஹ்மான், அலி சப்ரி ஆகியோர் தமது முடிவுகளை அறிவிக்கவில்லை.அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், தற்போது மௌனம் காத்துவருகின்றனர்.

எதிரணியில் இருந்து 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அரவிந்தகுமார், டயானா ஆகியோரும் தமது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே, இவர்களின் ஆதரவும் தமக்குதான் என அரசாங்கம் கருதுகின்றது.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட மொட்டு கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. பங்காளிகளின் ஆதரவு கிடைத்தது. 20 ஐ ஆதரித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேசக்கரம் நீட்டினர்.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 145, ஈபிடிபி – 02, தேசிய காங்கிரஸ் – 01, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01, எமது மக்கள் சக்தி – 01, ஶ்ரீங்கா சுதந்திரக்கட்சி – 01, முஸ்லிம் காங்கிரஸ் – 04, மக்கள் காங்கிரஸ் – 02, அலிசப்ரி (புத்தளம்) – 01, அரவிந்தகுமார் – 01, டயானா – 01 என அரசாங்கத்திற்கு ஆதரவாக (சபாநாயகர்தவிர) நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் இருந்தன.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக இன்று 40 பேர் அறிவித்தனர். (முடிவை மாற்றிய மூவர் உள்ளடக்கப்படவில்லை.)

எனவே 159 – 40 = 119, விஜயதாச ராஜபக்ச ஏற்கனவே ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார். 119 – 01 = 118, இதில் சுயாதீனமாக செயற்படபோவதாக முஷாரப் இன்று அறிவித்தார்.

இதன்காரணமாக 118 – 01 = 117, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. அரசுக்கு ஆதரவு வழங்கக்ககூடாதென கிழக்கு மாகாண மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றால் 117 – 04 = 113, அரவிந்தகுமார், அலி சப்ரி, இசாக் ரஹ்மான் ஆகியோர் சுயாதீனமாக இயங்கும் முடிவை எடுத்தால் 113 -03 = 110 அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.

அரசு கூறுவதுபோல இவர்களின் ஆதரவு தொடர்ந்தால் சாதாரண பெரும்பான்மை தக்கவைத்துக்கொள்ளப்படும்.

அதேவேளை, நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளையும், நாளை மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

No comments: