இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சுகாதார சேவைத் துறையில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஏனைய உப பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து இலங்கை மருத்துவ சபை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இந்த பற்றாக்குறை நிலைமை காரணமாக, வழக்கமான சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் போன்ற சில சேவைகளை குறைப்பதற்கும், உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏற்கனவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை இலங்கை மருத்துவ சபை, ஜனாதிபதிக்கு தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது ஒரு நிலையான கொள்கையாக இருக்கமுடியாது. இந்தநிலைமை இன்னும் சில வாரங்களுக்கு தொடர்ந்தால், அவசர சிகிச்சைகளையும் மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டு விடும்.
இதன்போது, கொரோனா, சுனாமி மற்றும் உள்நாட்டுப் போரின் ஆகியவற்றின்போது ஏற்பட்ட இறப்புக்களை காட்டிலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாகி விடும் என்று இலங்கை மருத்துவ சபை எச்சரித்துள்ளது.
எனவே, மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதாரத் துறை தொடர்பான தற்காலிகத் திட்டம் ஒன்றை உருவாக்க சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி தருமாறு இலங்கை மருத்துவ சபை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
No comments: