News Just In

3/04/2022 06:03:00 AM

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!


வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை இந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாகன இறக்குமதி நடைபெறாது என நாட்டின் முன்னணி வாகன இறக்குமதியாளர்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற 600 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது என்பதனை தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது வாகனங்களை இறக்குமதி செய்யாது இருப்பதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் கோவிட் ஆரம்பித்தது முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், இன்று நாம் காணும் எரிபொருள் வரிசை இன்னும் பல கிலோமீட்டர்களை கடந்திருக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான தடை, எரிபொருள் நெருக்கடி மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யாமை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் நாட்டில் டொலர்கள் பற்றாக்குறையே பிரதான காரணமாகத் தோன்றுவதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் தற்போதுள்ள வாகனங்களின் விலைகள் மக்கள் எதிர்பாராத வகையில் அதிகரிக்கலாம் என வாகன இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments: