News Just In

3/08/2022 10:47:00 AM

கொவிட்டால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை உறவினர்களின் விருப்பத்திற்கமைய முன்னெடுக்க முடியும் - வைத்திய நிபுணர் சன்ன பெரேரா

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களின் இறுதி சடங்குகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்று நிரூபத்திற்கமைய , உறவினர்களின் விருப்பத்திற்கமைய இறுதி சடங்கினை செய்ய முடியும்.


எனினும் சடலம் ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி சடங்கு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கொவிட் சடலங்களின் இறுதி சடங்கு தொடர்பில் தீர்மானிக்கும் குழு உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சன்ன பெரேரா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை 07 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களில் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 2020 மார்ச் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக பாரம்பரிய கலாசாரங்களை மீறி சில கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியேறப்பட்டது.தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்களுக்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கான இறுதி சடங்குகளை உறவினர்கள் விரும்பும்படி செய்ய முடியும்.

எனினும் சடலம் கையளிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி சடங்குகள் இடம்பெற வேண்டும் ,வைத்தியசாலையிலிருந்து இறுதி சடங்குகள் இடம்பெறும் இடத்திற்கு மாத்திரமே சடலங்களைக் கொண்டு செல்ல முடியும்.

வீடுகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அத்தோடு சடலங்கள் சடல பையில் பொதியிடப்பட்டு , உறவினர்களால் வழங்கப்படும் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு , சீல் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.பொதியிட முன்னர் உயிரிழந்தவரின் நெருங்கிய 10 உறவினர்களுக்கு மாத்திரம் சடலத்தை பார்வையிட அனுமதி வழங்கப்படும்.

இறுதி சடங்கு இடம்பெறும் இடத்தில் 10 இற்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொள்ள முடியும். எனினும் சடலத்தை திறந்து பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.வைத்தியசாலையிலிருந்து சடலத்தை கொண்டு செல்லும் செலவுகள் அனைத்தையும் உறவினர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments: