இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தமுடியாது திணறிக்கொண்டிருக்கின்றார்கள்.உணவுப்பொருட்களின் விலைகள் வானளவை தொட்டு விட்டன. பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை நிர்ணய விலையில் வழங்க முடியாது அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தனது கை மீறி நிலைமைகள் சென்றுவிட்டதை ஏற்றுக்கொண்டுள்ளதோடு வணிகர்களின் ஏதேச்சதிகாரப் போக்கினை கட்டுப்படுத்த முடியாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
தற்போது வரையில் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக நீண்ட வரிசைகளில் நாள் தோறும் காத்திருப்பவர்களில் மூவர் உயிரிழந்து விட்டனர். இருப்பினும் நீண்ட வரிசைகள் தொடர்கதையாகவே உள்ளது.
பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றன. எரிபொருட்கள் கிடைக்காமையினால் இந்த முடிவினை அவை எடுத்துள்ளன. அதேநேரம் சப்புகஸ்கந்தை எரிபொருள் பகுப்பாய்வு நிலையமும் மூடப்பட்டுள்ளது.
இதனைவிடவும், கொலன்னாவ முனையத்திற்கு டீசல் இருப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக சென்ற பல தாங்கி ஊர்திகள் டீசல் கிடைக்காத காரணத்தினால் ஏற்கனவே கொலன்னாவ கஜபாபுர தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மறுபக்கத்தில், வறட்சியான காலநிலை காரணமாக, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனால், இன்னும் ஒருவார காலத்திற்கு அவசியமான மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்காமையால், மின் உற்பத்திக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனால் 26ஆண்டுகளுக்குப் பின்னர் அமுலாக்கப்பட்டுள்ள ஏழரை மணிநேர மின்வெட்டு அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம் என கருதப்படுகின்றது.
அதேநேரம், இலங்கை அரசாங்கத்திற்கு இந்த மாத இறுதிக்குள் 3001பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்களையும் வருட இறுதிக்குள் 6.9பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்களையும் மீளச் செலுத்த வேண்டியுள்ளது.
அதனை விடவும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
கடந்த மாதம் மொத்த பணவீக்கம் 17.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளதோடு உணவுப்பணவீக்கம் 24.7 சதவீதமாகவும், உணவல்லாப் பணவீக்கம் 11சதவீதமாக காணப்படுகின்றது. இதனால் அரசாங்கம் தடுமாறிப்போயிருக்கின்றது.
இந்ந நிலையில் இந்தியா கடந்த மூன்று மாதங்களுக்குள் இலங்கையின் பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதற்காக 2.4பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இதனைவிடவும், நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக கடந்த நாட்களில் அனுப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பல்களைப் போன்று மீண்டும் 3500 மெற்றிக் தொன் டீசலுடன் கப்பலொன்று வருகின்றது. இந்தக் கப்பலானது இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைவிடவும், இந்தியாவின் வழிகாட்டலில் இலங்கை அரசாங்கம் நெகிழ்வுப்போக்கை காண்பிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதற்கு அமைவாக, இலங்கை பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் முக்கியமான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
குறித்த இலங்கை பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில், தொற்றுநோய்க்கு முந்தைய வரி குறைப்புகள் மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் நிதிப் பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தைக் கடந்தது.
கடந்த ஆண்டு, அரசாங்கக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 119 சதவீதமாக உயர்ந்ததுடன், சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கான அணுகல் இல்லாமல்போனது.வெளிநாட்டு கடன் தீர்ப்பனவுகள் மற்றும் நடைமுறைக் கணக்கு நிலுவை விரிவாக்கம் காரணமாக அந்நிய செலாவணி பற்றாக்குறை உருவாகியுள்ளது.
இலங்கையானது, கொடுப்பனவு சமநிலை மற்றும் இறையாண்மைக் கடன் நெருக்கடியை அனுபவிக்கத் தொடங்கியதுடன், வெளிநாட்டு இருப்புக்கள், கடனைச் செலுத்துவதற்குப் போதுமானதாக இன்மையால், அரசாங்கக் கடன் சுமை அதிகரித்தது.
பரிமாற்ற கையிருப்பை கட்டியெழுப்புவதற்கு அதிகாரிகள் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வருடத்திற்கு அப்பால் இலங்கையால் எவ்வாறு பாரிய கடன் சேவையை பேண முடியும் என்பது தெளிவற்றதாகும்.
இந்தச் சூழலில் நிதி ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவது, வருமான வளர்ச்சியின் அடிப்படையில் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை உறுதிப்படுத்தியதோடு, இலங்கை மத்திய வங்கியும், நிதி அமைச்சும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவிடத்தில் மேலும் 1.5பில்லியன் டொலர்களை அவரச உதவியாக வழங்குமாற கோரியுள்ளது. இலங்கை விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடத்தில் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
இந்த மேலதிக தொகையை இந்தியா வழங்குமா இல்லையா என்பதற்கு அப்பால் ஏற்கனவே இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களுக்கான உற்பத்திகளை அனுப்பும் பணியை இந்தியா தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
அதேநேரத்தில், இந்தியா, இலங்கை மீது விசேட கவனத்தினையும் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இலங்கையில் இருந்து மன்னார் ஊடக தமிழகம் சென்றவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவை இந்தியா இலங்கை மீது கொண்டிருக்கும் அதீத கரிசனையை வெளிப்படுத்துவதாக உள்ளது.குறிப்பாக, இந்தியா அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற தனது கோட்பாட்டின் கீழ் நின்று இலங்கை தொடர்பிலான அதீத கரிசனையை கையில் எடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கை ‘ஆறு கடக்கும் வரையில் அண்ணன் தம்பி’ என்ற உறவினை கடந்து இருதரப்பு உறவுகளைப் பேணுவதே பொருத்தமானதாக இருக்கும். அதனைத் தவிர்த்து வேறு நகர்வுகளை மேற்கொண்டால் பாதக விளைவு இலங்கைக்கே .
No comments: