News Just In

3/26/2022 12:45:00 PM

சமூக மோதலுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை பற்றிய பயிற்சிநெறி!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சமூக மோதல் ஏற்படுவதற்கான சமிக்ஞைகளை முன்கூட்டியே அறிந்துகொண்டு அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உயிர் உடமை அழிவுகளை ஏற்படுத்தும் வன்முறைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என முகாமைத்துவ ஆலோசகர் ஜே. பெனடிக்ற் தெரிவித்தார்

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சமூக மோதலுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை பற்றிய பயிற்சிநெறி மட்டக்களப்பு நொச்சிமுனை தனியார் விடுதியில் சனிக்கிழமை 26.03.2022 இடம்பெற்றது.

சர்வமதப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பயிற்சி நெறியில் மாவட்டத்திலுள்ள சர்வமத செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து பயிற்சி நெறியின் நோக்கத்தைப் பற்றித் தெளிவுபடுத்திய பெனடிக்ற், எமது நாட்டிலே பல்வேறு முரண்பாடுகளுக்கு நாங்கள் முகம் கொடுத்து வந்துள்ளோம். அவற்றைச் சரியாகப் பகுப்பாய்வு செய்து தீர்வு காணாது எல்லாவற்றையும் வன்முறைகளால் இழந்து பின்னர் சமாதானத்தை தேடுகின்றவர்களாக நாம் இருக்கின்றோம்.

சமகாலச் சூழலில் ஒவ்வொருவரும் குறிப்பாக சமாதான செயற்பாட்டாளர்கள் மோதல்கள் எவ்வாறு வன்முறையாக உருமாற்றம் பெற்று சமூகங்களுக்கிடையில் பேரழிவுகளையும் தீராப் பகைமைiயும் அமைதியின்மையையும் ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய தெளிவைப் பெற்றிருக்க வேண்டும்.

மோதல்களை துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யாததால் அவை வன்முறைகளுக்கு இட்டுச் சென்று சமூகங்களை பிளவுபடுத்தி பேரழிவை உண்டாக்குகின்றன.மோதல்களை ஆக்கபூர்வமாகக் கையாளா விட்டால் அது ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இயற்கைக்கும் பேரழிவை உண்டாக்கக் கூடியது.

ஆகவே, இந்த நாட்டில் பல்லின சமூகம் பரஸ்பரம் அடுத்தவருக்காக குரல் கொடுக்கின்ற நிலைமை வரும்பொழுது சகவாழ்வும் சௌஜன்யமும் சமாதானமும் ஏற்படும்.

தனித்துவங்களை ஏற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக தற்போதய யுத்தமில்லாத சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.






No comments: