மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத்தோட்டங்களினை ஆரம்பிப்பதற்காக 20ஆயிரம் குடும்பங்களுக்கு 10கோடி ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடுசெய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய பசுமை புரட்சியை நோக்காக்கொண்ட 'நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்!' எனும் தேசிய செயற்றிட்டத்தின் நிகழ்வு ஒன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணியில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொண்டு உள்ளூர் உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் ஊட்டச்சத்து இல்லாத ஆரோக்கியமான சுய ஊட்டச்சத்து குடும்ப அலகை உருவாக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6341 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு தலா 5000 ரூபா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது நாற்றுகள் நடப்பட்டு வீட்டு தோட்ட செய்கை ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் நடப்பட்டதுடன் பயனாளிகளுக்கான நாற்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்தா மாவட்ட விவசாய உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பணிப்பாளர்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments: