News Just In

1/29/2022 07:21:00 AM

வடக்கு மாகாணத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் 4 கொரோனா உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் நேற்றுதினம்(27) வரை வடக்கு மாகாணத்தில் 726 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாளொன்றுக்கு 10 பேர் மட்டும் இனங்காணப்பட்டு வந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு தினமும் 60 தொடக்கம் 70 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்படுகின்றார்கள்.

ஒமைக்ரோன் நோயானது உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தச் சூழ்நிலையில் எங்களுடைய நாட்டில் தற்போது மேல் மாகாணத்திலும் மேலும் பல மாகாணங்களிலும் வேகமாக பரவி வருகின்றது. வடக்கு மாகாணத்திலும் இந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள இருக்கின்ற ஒரே ஒரு பாதுகாப்பான விடயம் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதுதான்.

முதல் இரண்டு தடுப்பூசியினை பலரும் பெற்ற போதிலும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியினை பெறாமையின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நிலையில் வேகமாக கொரோனா நோய் தொற்றகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

No comments: