News Just In

1/03/2022 01:07:00 PM

தந்தை செல்வா கலையரங்க அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டமும் ஒன்று கூடலும் !



-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை அண்டி அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்க அறக்கட்டளையின் வருடாந்த மாநாடும் ஒன்றுகூடலும் அதன் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ்.சி.சி. இளங்கோவன் தலைமையில் திங்களன்று இடம்பெற்றது.

இந்த அமர்வில் தந்தை செல்வா அறக்கட்டளையின் நம்பிக்கையாளர் சபையைச் சேர்ந்த பிரமுகர்களான ஆர். பேரின்பநாயகம், நாகலிங்கம் வேதநாயகம், எஸ். கிருஷ்ணானந்தன் உட்பட இன்னும் அதன் நிருவாகக் குழு உறுப்பினர்களும் அங்கத்தவர்களும் அலுவலர்களும் சமூக சேவைச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.


இந்த வருடாந்த ஒன்று கூடலில் தந்தை செல்வா கலையரங்க அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக சேவைச் செயற்பாடுகள், அதன் எதிர்காலச் செயற் திட்டங்கள் குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

தந்தை செல்வா அறக்கட்டளை மூலம் பொதுக் கல்வி, ஆங்கிலம் கணிதம் உள்ளிட்ட குறிப்பான அறிவுசார் கல்வி;, சமாதானம், பாதிக்கப்பட்ட மக்களின் கலை கலாசார பண்பாட்டு மீட்சி, சமாதான எண்ணக்கருக்களை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகம் தொடர்ந்தும் இத்தகைய சமூக அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக சமாதான எண்ணக்கரு குறித்து தனிமனித செயற்பாடும் அடுத்த தலைமுறையினருக்கு சமாதானத்தை நோக்கிய அகன்ற பார்வையைக் கொண்டு சேர்ப்பித்தலும் இடம்பெறவேண்டும். இந்த செயற் திட்டத்திற்கு அர்ப்பணிப்பதாக அறக்கட்டளையின் எதிர்கால செயற்பாடுகள் முனைப்புப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கு தந்தை செல்வா அவர்களின் நினைவாகவும் யுத்தத்திலிருந்து மீண்டெழும் தமிழ் பேசும் மக்களின் வல்லமையின் எடுத்துக் காட்டாகவும் தந்தை செல்வா அறக்கட்டளையின் தாராள பங்களிப்புடனும் 01.07.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.அன்று தொடக்கம் இன்று வரை அது பல்லின சகவாழ்வு மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்காக இயங்கி வருகின்றது.


No comments: