News Just In

1/25/2022 09:03:00 PM

14 வாசிக சாலைகளுக்கு புத்தகப் பொதிகள் கையளிப்பு!

கலாசர அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நெனசர வாசிகசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பிலுள்ள 14 வாசிகசாலைகளுக்கு புத்தகப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25.01.2022) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் ஏற்பாட்டில் பிரதேச செயலகப் பிரிவுகளின்கீழ், நாடு பூராகவுமுள்ள பின்தங்கிய வாசிகசாலைகளை வளப்படுத்தும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனூடாக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் வாசிகசாலைகளுக்கு இலக்கியம் மற்றும் ஆய்வு நூல்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை கடந்த 2021 காலப்பகுதிக்கான நெனசர வேலைத்திட்டம் கோவிட் 19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது. தற்போது இம்மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்து 14 பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய வாசிகசாலைகளுக்கு சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான இப்புத்தகத் தொகுதிகள் உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரனினால் நூலகர்களிடம் கையளிக்கப்பட்டது.

மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ. ஜெய்னுலாப்தீனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வாசிகசாலைக்குப் பொறுப்பான நூலகர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

மேலும் 2022 ஆம் ஆண்டிற்காக ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இரண்டு வாசிகசாலைகள் தெரிவு செய்யப்பட்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் புத்தகப் பொதிகள் வளங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.எச்.ஹுஸைன் 





No comments: