News Just In

12/22/2021 01:06:00 PM

ஆசிரியர்களை சொந்த இடங்களுக்கு இடம் மாற்ற கோரிக்கை!


விலைவாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாத நிலையில் வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்களை தத்தமது சொந்த வதிவிட மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் கானா நடராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் தற்போத நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள், போக்குவரத்து கட்டணங்கள் அடங்கலாக அனைத்தும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் மாத்திரம் ஒரு சதவீதம் கூட அதிகரிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதுடன், அரச ஊழியர்கள் செய்வதறியாது திண்டாடுகின்றனர்.

மாதாந்தம் வழங்கப்படுகின்ற அரச ஊழியர்களுக்கான சம்பளம் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப 15 நாட்களுக்கு மாத்திரமே செலவு செய்வதற்கு போதுமானதாக உள்ளது.இந்நிலையில் வெளி மாவட்டங்களில் அரசின் கட்டாய சேவை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்ற ஊழியர்கள் துயரங்களை அனுபவித்து வருவதுடன், தாம் பெற்றுக் கொள்கின்ற வேதம் முழுவதையும் தனது வாழ்க்கைச் செலவுக்கு செலவிட வேண்டியுள்ளது.
அத்துடன் மேலதிகமாக தனது வீட்டிலிருந்து செலவுக்காக பணத்தை கோரிப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.

இதனால் கடனாளி என்ற அடைமொழிக்குள் அகப்பட்டு அரச ஊழியர்கள் சிக்கித் தவிக்கும் பரிதாபகரமான ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை கருத்திற்கொண்டு வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் கோரிக்கை விடுக்குமிடத்து அவர்களை தத்தமது சொந்த வதிவிட மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் கானா நடராஜா தெரிவித்துள்ளார்.

No comments: