News Just In

12/14/2021 02:20:00 PM

நிரந்தர நியமனம் வழங்கப்படாமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆளுநருக்கு உடனடியாக நியமனத்தை வழங்கக்கோரிக்கை!




மலையக தோட்டப்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் 2015 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் வழங்கப்பட்டது அதன் பின் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு ஏற்ப கட்டம் கட்டமாக நியமனங்கள் வழங்கப்பட்டன. எனினும் 6 வருடங்கள் கடந்தும் மத்திய மாகாணத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர் உதவியாளர்கள் 306 பேருக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆளுநருக்கு உடனடியாக நியமனத்தை வழங்கக்கோரி கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

 அவர்மேலும்  குறிப்பிடுகையில் 2016/05/16 ஆம் திகதி நியமனம் பெற்ற ஆசிரியை உதவியாளர்கள் 2019/10/01 திகதிக்கு இரண்டு வருடம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியையும் அதன்பின் நடைபெற்ற பரீட்சையில் சித்தியினையும் பெற்றுள்ளதால் நியமனங்களை உடனடியாக வழங்கக்கோரி பல போராட்டங்களை மேற்கொண்ட போதும் அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த மத்திய மாகாண கல்வி அமைச்சு 2021/12/15 திகதி நியமனம் வழங்கப்படும் என ஆசிரியருக்கு கடிதங்களை அனுப்பி வைத்தது. தமக்கு நியமனம் கிடைக்குமென மகிழ்ச்சியோடு எதிர்ப்பார்த்த ஆசிரியருக்கு மத்திய மாகாண கல்வி அமைச்சரிடம் இருந்து நியமனம் வழங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா நோய் பரவல் காரணமாக தபால் மூலம் நியமனம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற ஆசிரிய உதவியாளர்களை அப்போது ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் அவர்களின் நியாயமான போராட்டங்களை கணக்கில் எடுக்காமல் அவர்களுக்கு அநீதி இழைத்தது போல் தற்போதைய அரசாங்கமும் மலையக மக்களுக்கு மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயற்படுவதை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு இன்னும் ஒரு சில நாட்களில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டி வரும் என மத்திய மாகாண ஆளுநர் அவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மலையக தமிழ் அரசியல்வாதிகள் தமது சுய அரசியல் இலாபங்களுக்காக மலையக ஆசிரிய நியமனத்தினை பயன்படுத்தாது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sundralingam Pradeep



No comments: