News Just In

12/21/2021 06:46:00 AM

மட்டக்களப்பு மாநகர முதல்வர் விடுக்கும் வேண்டுகோள்!

மட்டக்களப்பு மாநகர சபை பதவி நிலை சிரேஷ்ட உத்தியோகத்தர் எனக் கூறி ஒரு சிலரால் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் பொருட்கள் கையூட்டாக கோரப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட முறைப்பாடுகள்  கிடைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த செயற்பாடானது மக்களுக்கான சேவையினை தூய்மையான கரம் கொண்டு வழங்கிக் கொண்டிருக்கும் எமது மட்டக்களப்பு மாநகரசபை , மாநகரசபை உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு களங்கம் விளைவிக்கும் ஒரு செயற்பாடாகவே அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் நேற்றையதினம் (20) எமக்கு கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்.
01. சிகை அலங்கார நிலையத்தில் சென்று முடிதிருத்தம் செய்து விட்டு அதற்கான கட்டணம் செலுத்தாமல் வெளிவந்தமை.

02. கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் இறைச்சி கொள்வனவு செய்த பின்னர் அதற்கான கட்டனம் செலுத்தாமல் வெளிவந்தமை.

03. வன் பொருள் விற்பனை நிலையங்களில் (Hardware) மின்குமிழ்கள் , சீமெந்து மற்றும் கம்பிகளை பணம் செலுத்தாமல் கொள்வனவு செய்தமை.

தமது பாதுகாப்பினை கருத்தில் கொள்ளுமாறு மேற்படி சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் கூறிய காரணத்தினால் இரகசியத் தன்மை பேணப்படுவதனால் சில விபரங்களை நேரடியாக தெரிவிக்க முடியவில்லை. மட்டக்களப்பு மாநகர சபை பதவிநிலை உத்தியோகத்தர் எனக் கூறி எவராவது கையூட்டுகள் கோரினால் அதனை நீங்கள் வழங்க வேண்டாம். தயவு செய்து எம்மிடம் குறித்த விடயம் பற்றி முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இலஞ்சம் கோரல் அல்லது பொருள் இலஞ்சம் கோரல் தொடர்பாக எம்மிடம் முறைப்பாடு செய்யும் இடத்து குறித்த சட்டவிரோத நடவடிகைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை உடன் எடுக்கப்படும் எனவும் அத்துடன் இலஞ்சம் கோருவோருக்கு மாத்திரம் அல்லாமல் யாரேனும் சேவை பெறுனர் அல்லது வழங்குனர் இலஞ்சம் கொடுப்பின் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் குறிப்பிட்டார்.

எமது தூய்மையான சேவையினை மட்டு நகர் பொதுமக்களுக்கு நாம் மாநகர சபையினை பொறுப்பேற்ற காலம் முதல் வழங்கி வருகிறோம். அதனை பின்னடையச் செய்யும் முகமாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இனம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும் .

எனவே அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றோம். இவ்வாறான கையூட்டுகள் உங்களிடம் கோரப்படும் பட்சத்தில் முறைப்பாடுகளை என்னிடம் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக மற்றும் எனது இந்த முகனூல் பக்கம் ஊடாகவும் அறியத் தரலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: