News Just In

12/01/2021 06:50:00 PM

விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிச் சென்ற அமைச்சின் செயலாளர்கள்...!

யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை இரகசியமாக மீட்க முயற்சித்த இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் தனிப்பட்ட பணிக்குழுவைச் சேர்ந்த இரண்டு செயலாளர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் இருவரும் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் கடற்றொழில் அமைச்சர்களின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட இருந்தது. எனினும், கடந்த வாரம் முழுவதும் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டதால் தோண்டும் பணிகள் நாளை (02) வரை ஒத்தி வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி முற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவரும் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பொன்றை மேற்கொண்டு " நாம் அந்த பக்கமாக வருகிறோம். வந்ததும் சந்திப்போம்" என கூறியுள்ளனர்.

பின்னர் குறிப்பிட்ட நாளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற குறித்த இருவரும் , தாம் திட்டமிட்டுள்ள தோண்டும் பணிகளுக்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இரகசியமாக அதனை செய்ய உதவுமாறும் கோரியுள்ளனர்.

சில நாட்கள் கழித்து முல்லைத்தீவு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு இரண்டு செயலாளர்களின் வருகை தொடர்பில் தகவல் கிடைத்து விசாரிக்கும் வரையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவித்திருக்கவில்லை.

இதன்படி, அவர் ஏதேனும் கடமை மீறலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: