News Just In

12/18/2021 07:58:00 PM

மீண்டும் எரிவாயு விநியோகத்தை ஆரம்பித்துள்ள லிட்ரோ நிறுவனம்




இன்று (18) முதல் மீண்டும் சந்தைகளுக்கு சமையல் எரிவாயுவை விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்று காலை முதல் வழமையான உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயுவை ஏற்றி வந்த இரண்டு கப்பல்களில் ஒன்றை நேற்று மாலை நுகர்வோர் விவகார அதிகார சபை விடுவித்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது.எரிவாயு கசிவு உணர் திறனை தூண்டும் Mercaptan இரசாயன பதார்த்தம் தரமாக இன்மையால், பங்களாதேஷில் இருந்து வருகை தந்த EPIC BALTA கப்பலில் இருந்த 3,200 மெட்ரிக் தொன் LP கேஸை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்தது.

பின்னர் இரண்டாயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய PERIKLIS என்ற மற்றுமொரு கப்பல் கொழும்பை வந்தடைந்தது.இந்த கப்பலில் உள்ள எரிவாயுவின் தரம் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனம் அனுமதி வழங்கும் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.தரமற்ற முறையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீள சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உள்ளக பாவனைக்கான எரிவாயு சிலிண்டருக்கு பதிலாக தரமான புதிய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது பணம் அறவிட வேண்டாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதேவேளை, எரிவாயு சிலிண்டர்களுடன் தொடர்புடைய தீ சம்பவங்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்து தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி நியமித்த குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.

No comments: