News Just In

12/20/2021 06:59:00 AM

பின்னடைவான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான இஞ்சி உற்பத்தித் திட்டம் ஏறாவூரில் அமுலாக்கம்!

பின்னடைவான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான இஞ்சி உற்பத்தித் திட்டம் ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தெரிவித்தார்.

இந்தத் திட்டம், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டினால் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த கடந்த 2016ஆம் ஆண்டே இங்கு கொண்டு வரப்பட்டிருந்தது. வர்த்தக ரீதியில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற அவரது சிந்தனையிலமைந்த திட்டம், இப்பொழுது மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது என விவசாயப் போதனாசிரியை முர்ஷிதாஷிரீன் மேலும் தெரிவித்தார்.

இஞ்சி பயிர்ச் செய்கைக்காக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நாற்று நடுகைக்கான இஞ்சிகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 19.12.2021 ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம். ஹன்சுல் சிஹானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவருமான நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நடுகைக்கான இஞ்சி நாற்றுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் 17 விவசாயிகளுக்கு நடுகைக்கான 350 கிலோகிராம் இஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.

நிகழ்வில் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் உத்தியோகத்தர் நர்தனா குகதாஸன், தெரிவு செய்யப்பட்ட இஞ்சி உற்பத்தி விவசாயிகளுக்கு இஞ்சி நடுகை முறைமை, பயிர்ப் பாதுகாப்பு, அறுவடை பற்றிய பயிற்சிகளை வழங்கினார்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சீன ரக இஞ்சி 9 மாத காலத்தில் அறுவடை செய்யப்படக் கூடியது என்றும் அது சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டால் ஒன்பது மடங்கு அதிக விளைச்சலைத் தந்து விவசாயிகளுக்குப் பொருளாதார இலாபத்தையும் ஈட்டித் தரும் என்று விரிவாக்கல் உத்தியோகத்தர் நர்தனா தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு நாற்று நடுகைக்கான இலவச இஞ்சி வழங்கும் நிகழ்வில் விவசாயத் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கவிதாரணி பிறேம்ரூபன், ஜெயரஜனி தவராஜா, ஹேமச்சந்திரிகா திருமால் உள்ளிட்ட துறைசார்ந்த இன்னும் பல அலுவலர்களும் பயனாளிகளான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

.எச்.ஹுஸைன்








No comments: