News Just In

12/08/2021 07:14:00 PM

வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. குன்னூரில் நடந்தது என்ன ?

குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த ஹெலிகாப்டரில் பல உயரதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில், இந்த விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களை களத்தில் இருந்து நேரடியாகவே பெற்றுள்ளோம்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த பகுதி குன்னூர் அருகே காட்டேரி எனப்படும் மலைப்பகுதியாகும்.

இங்கு மஞ்சபாசத்திரம் என்ற இடம் உள்ளது. இங்கு தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும். இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்காகவே அரசு தனியாக வீடுகள் கட்டித்தரும். தோட்டங்களை ஒட்டிய பகுதிகளில் இந்த வீடு கட்டப்பட்டிருக்கும். இதை தொகுப்பு வீடுகள் என்பார்கள்.

2 ரூம்கள்தான் இந்த வீடுகளில் கட்டப்பட்டிருக்கும். இப்படி இந்த பகுதியில் 51 வீடுகள் இருக்கின்றன.

தோட்ட தொழிலாளர்கள்

இவர்கள் இங்கேயே தங்கி சுற்றுவட்டார தோட்டங்களில் வேலை பார்த்து வருவார்கள். இன்றும் அப்படித்தான், காலையிலேயே தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது 11.20 மணிக்கு பயங்கர சத்தம் ஒன்று காட்டுப்பகுதியில் கேட்டுள்ளது..

தோட்டத்தை ஒட்டியுள்ள இந்த காட்டுப்பகுதிக்கு ஓடிச் சென்று பார்த்தபோது ஓங்கிஉயர்ந்து காணப்படும் 2 கற்பூர மரங்கள் படபடவென எரிந்து முறிந்து விழுவதை பார்த்துள்ளனர்.

கரும்புகை

முற்றிலும் தீப்பிடித்து அந்த மரங்கள் எரியும்போதே, அந்த பகுதியை சுற்றிலும் கரும்புகை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டதாம்.. இதை பார்த்ததும் அந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர்..

ஆனால், ஆரம்பத்தில் இவர்களுக்கு ஹெலிகாப்டர் விபத்து நடந்தது என்றே தெரியாது.. விபத்து நடந்த பகுதியில்தான் இவர்களின் வீடுகள் உள்ளது என்றாலும், உயிரை கையில் பிடித்து கொண்டு, வீடுகளுக்குள் ஓடிவந்து தஞ்சம் புகுந்துள்ளனர்..

அப்போதுதான், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் 2 டயர்களின் வீல்கள் மற்றும் ஹெலிகாப்டரின் பின்பக்க பகுதியும், அந்த வீடுகளின் வாசலுக்கு அருகிலேயே விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.

ஓட்டு வீடுகள்

ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது முன்பக்க காட்டுப்பகுதி என்றால், மரங்கள் முறிந்து விழுந்தது டீ எஸ்டேட் பகுதியில்.. இந்த தொகுப்பு வீடுகளின் கடைசி வீட்டை ஒட்டியே இந்த காட்டுப்பகுதி ஆரம்பிக்கிறது.. அதனால், இந்த கடைசி வீடு கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது..

இது அனைத்துமே ஓடுவீடுகள் என்பதாலும், முற்றிலும் சிமெண்ட்டினால் கட்டப்பட்டுள்ளதாலும், வீடுகள் முழுக்க கரி படிந்து விட்டன.. அந்த வீட்டின் ஃபேன் இறக்கை ஒன்று கழண்டு கீழே விழுந்துள்ளது..

மருத்துவமனை

இதில் 10 பேரை 80 சதவீத தீக்காயத்துடன் மீட்டுள்ளனர்.. இதில் 2 பேர் அந்த குடியிருப்பு பகுதி அருகில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.. அவர்களுக்கு உயிர் இருந்துள்ளது.. உடம்பெல்லாம் நெருப்பு பற்றி எரிந்த நிலையில் அவர்கள் மயங்கிய கிடந்துள்ளனர்..

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. ஆனால், 90 சதவீதம் உடம்பு அவர்களுக்கு எரிந்துவிட்டதாம்.. குறிப்பாக, 2 பேருக்குமே வயிற்று பகுதிக்கு கீழ் பகுதி பெரும்பாலும் எரிந்து கருகி விட்டதாக அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள்.


இப்போது இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..

கட்டுப்பாடு

விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ ஆரம்பித்துவிட்டது.. உடனடியாக அந்த பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுவிட்டன.. பொதுமக்கள், உட்பட யாரையுமே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நெருங்க விடவில்லை..

நீலகிரியில் தற்போது பனிக்காலம் என்பதால், காலையில் இருந்தே அடர் பனிமூட்டம் காணப்பட்டது.. இந்த காலநிலையால்தான், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.




No comments: