News Just In

11/15/2021 06:41:00 AM

கொரோனா கால மூன்றாம் கட்டக் கொடுப்பனவில் கோறளைப்பற்று மத்தி புறக்கணிப்பு!

கொரோனா கால மூன்றாம் கட்டக் கொடுப்பனவில் கோறளைப்பற்று மத்தி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி கோறளைப்பற்று, வாழைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 12.11.2021ம் திகதி வெள்ளிக்கிழமை மகஜர்களைக் கையளித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கடந்த கொரோனா காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூன்றாம் கட்டக்கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்ட நிலையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவு மாத்திரம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் வினவிய போது, பிரதேச சமுர்த்தி தலைமை முகாமையாளரால் எமக்கு வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அதற்கான கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் வழங்கியுள்ளோம்.

அவ்வாறு கோறளைப்பற்று மத்தி புறக்கணிக்கப்பட்டிருக்குமாக இருந்தால், அப்பிரதேச சமுர்த்தி தலைமை முகாமையாளரும் பிரதேச செயலகமுமே பொறுப்புக்கூற வேண்டும். அதே நேரம், பிரதேச செயலக மட்டத்தில் விடப்பட்ட தவறு காரணமாக நாமும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன், இக்கொடுப்பனவினைப் பெற்றுக் கொடுக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், கடந்த கொரோனா காலத்தில் கோறளைப்பற்று மத்தி அதிகம் பாதிக்கப்பட்டு சிவப்பு வலயமாகப் பிரகடனப்பட்டிருந்த நிலையில், மக்கள் தொழில் இழப்புக்கள், வருமானங்களை இழந்து தவித்த வேளையில் அப்பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 1096 பயனாளிகள் குறித்த கொடுப்பனவில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, இக்கொடுப்பனவினை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியே குறித்த மகஜர்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட சமுர்த்தி திணைக்கள கணக்காளர், கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் ஆகியோரிடம் சமுர்த்தி சமூக மட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்களுடன் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அலட்சியப் போக்குடன் செயற்பட்ட மற்றும் மக்களின் நன்மைகருதி பணியாற்றாத முகாமையாளரை இடமாற்றி பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டியது உயரதிகாரிகளினதும் மாவட்ட செயலகத்தினதும் பொறுப்பாகும் என்பதுடன், இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் மக்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் தயாராகவிருப்பதாக மேலும் தெரிவித்தார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்  






No comments: