News Just In

11/23/2021 07:22:00 PM

கிண்ணியா குறிஞ்சாக்கேணி விபத்திற்கு காரணம் யார் ? பாராளுமன்றில் விளக்கினார் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ !

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (23.11.2021) இடம்பெற்ற விபத்து தொடர்பில் எதிரணி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களின் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்து அரசாங்கத்தை சாடி பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்றுவரும் பாலத்தின் நிர்மாண பணிகள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே ஆரம்பிக்கபட்டதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சிக்காரர்களின் உரைக்கு பதில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்களின் கவலையை தெரிவித்து கொள்கிறோம். இந்த விபத்தையும் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு முன்னவைக்க முயற்சிக்கிறார்கள். கிண்ணியா. குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று படகு விபத்துக்குள்ளான பகுதியில் பால நிர்மாண பணிகள் இடம்பற்று வருகின்றன. இந்த பாலத்தின் நிர்மாணப்பணிகளுக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கமே அடிக்கல் நாட்டியுள்ளது. எந்தவொரு மதிப்பீடும் இல்லாமல், விலைமனு கோரமல் இந்த பாலத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

எங்களின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னரே மதிப்பீடு செய்யப்பட்டு விலைமானு கோரல் விடுக்கப்பட்டு பாலத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மக்களின் பாவனைக்கு விரைவாக பெற்று கொடுப்பதற்காகவே இந்த பாலத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது மக்களின் போக்குவரத்துக்காக மாற்று வீதியும் வழங்கப்பட்டது. அந்த வீதி 3 கிலோமீற்றர் தூரம் கொண்டுள்ளது. அதனால் அந்த பிரதேச மக்கள் அந்த வீதியை பயன்படுத்துவதற்கு விரும்புவதாக இல்லை. இதுவே எனக்கு அங்கிருந்து கிடைத்த தகவல்.

சம்பந்தப்பட்ட நகரசபையினால் இந்த படகு சேவை வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படகு சேவைக்கும் அரசாங்கத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. விபத்துக்குள்ளான படகில் பயணித்த மாணவர்கள் பாதுகாப்பு ஆடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2021.10.28 ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றினூடாக கிண்ணியா-07, பெரியாற்றுமுனையை சேர்ந்த எம்.ஏ.எம். றியாஸ் என்பவருக்கு மூன்று நிபந்தனைங்களை முன்வைத்து கிண்ணியா நகர பிதா எஸ்.எச்.எம். நளீம் இந்த படகுச்சேவையை முன்னெடுக்க அனுமதி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்



No comments: