News Just In

11/18/2021 05:53:00 PM

20 வருட உத்தரவாதம் கிடைத்த பின்னரே கல்முனை பேருந்து நிலைய அபிவிருத்திக்கு அனுமதித்தோம் : கல்முனை முதல்வர் ஏ.எம். றக்கீப் தெரிவிப்பு

கல்முனை பேருந்து நிலையத்தில் பதிக்கப்படும் கற்களை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான பொறியியல் உசாத்துணை நிர்மாண சேவைகள் நிறுவனம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை என்பன பரீட்சித்து இந்த கற்களை பதிப்பது தொடர்பில் திருப்திகரமான அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பின்னர் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகாரசபையிலும் பரிசோதனைகளை மேற்கொண்டு தரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். 50 தொன் எடையுள்ள வாகனத்தை தாங்கும் வலுமிக்கதாக இந்த கற்கள் உள்ளது. பதிக்கப்படும் கற்கள் சாதாரணமானவற்றை விட 06% பலமானதாக உள்ளதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி 20 வருட கால உத்தவாதமும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனுமதித்துள்ளோம் என கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவித்தார்.

நேற்று பஸ்நிலைய புனரமைப்பு தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக விளக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று மதியம் (18) கல்முனை முதல்வரின் காரியாலயத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசிய அவர், இலங்கை முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கல்முனையின் தேவைப்பாடுகள், கல்முனையின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தின் நிமிர்த்தம் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவின் காரணமாக கிடைக்கப்பெற்ற நன்மைகள் ஏராளம். அதில் ஒன்றே கல்முனை மத்திய பஸ் நிலைய அபிவிருத்திக்காக கடலோர பாதுகாப்பு கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமூதாய தூய்மை இராஜாங்க அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 18.7 மில்லியன் ரூபாய் நிதி. அதனை கொண்டு புனரமைக்கப்படும் பஸ் நிலையமானது மக்களுக்கு நீண்டகாலப்பாவனைக்கு உதவும் என்ற உத்தரவாதம் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1000 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கல்முனை முதலில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. பின்னர் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் எடுத்த கடுமையான முயற்சியின் காரணமாக பின்நாட்களில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த பஸ்நிலைய அபிவிருத்தி தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை தனது நிதியை கொண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எண்ணி தனது பொறியியலார்கள், கட்டிட துறைசார் வல்லுநர்களினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் பின்னரே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை எதிர்காலத்தில் மின்விளக்குகள், மரங்களை கொண்டு அழகுபடுத்த உள்ளோம். அதற்கான திட்டமிடல்கள் எங்களின் கைகளிலுள்ளது.

இதேபோன்றே வேலைத்திட்டம் அம்பாறை, மட்டக்களப்பு, மூதூர், கொழும்பு, மொரட்டுவ, ஹம்பாந்தோட்டை பஸ்நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ளது. இங்கு காபட் இடுவதாக இருந்தால் 01 இஞ்ச் அளவில்தான் விடமுடியும். அது 05 வருடங்களுக்கு மேல் நிலைத்து நிற்காது. இந்த வேலைத்திட்டங்களை பல உயரதிகாரிகள் பார்வையிட்டு சிறந்தமுறையில் நடைபெறுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்கள். நான் முதல்வராக இருந்தாலும், இல்லாமல் விட்டாலும் கல்முனை மாநகரத்தில் வாழ்பவன். எனது பரம்பரையை சபிக்குமளவுக்கு நான் எந்த துரோகத்தையும் கல்முனைக்கு செய்ய மாட்டேன் என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார் உட்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நூருல் ஹுதா உமர்

No comments: