News Just In

10/23/2021 07:28:00 AM

என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்று சித்திரிக்க முயற்சி - சபையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன்


கடந்த காலத்தில் என்னை பழிவாங்கவும், அரசியலில் இருந்து வெளியேற்றவும் சிறையில் அடைத்தனர். என்னினும் இவர்களின் சதித்திட்டத்தில் இருந்து மீண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளேன் என்பதற்காக அதனை சகித்துக்கொள்ள முடியாது தற்போது என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்றும், மண் கொள்ளையில் ஈடுபடுகின்றேன் என சித்தரிக்க முயற்சிகின்றனர் என ஆளுங்கட்சி பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட 2021.03.10ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றியகுழுவின் (கோப் குழு) அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்,

அவர் மேலும் கூறுகையில், இலங்கை மத்திய வங்கி ஊழல் குறித்தும் கோப் குழு சுட்டிக்காட்டிய வேளையில் பாராளுமனத்தின் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவோ தீர்வு கிடைக்கவில்லை, ஆனால் பொதுமக்கள் நல்ல தீர்ப்பு ஒன்றை வழங்கினர். பலமானதும் பாரம்பரிய கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக நிராகரித்தனர். ஆகவே மக்கள் இந்த விடயங்களை அவதானித்துக்கொண்டுள்ளனர். அவர்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.

அதேபோல் என்னைப்போன்ற நபர்களை அரசியலில் இருந்து அகற்றுவதற்கு பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். சாணக்கியன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் என்னை பற்றி பேசியுள்ளார்.

என்னிடம் மண் அகழ்வு பத்திரம் இருப்பதாக பொய்யை கூறியுள்ளார். அதற்கான ஆதாரமாக சில விடயங்களை முன்வைத்துள்ளார். ஆனால் அது வேறு ஒரு நபர். அவர் நான்தான் என என்னை குற்றவாளியாக்க முயற்சித்துள்ளார்.

அரசியலுக்காக பொய்களை கூறாது பொறுப்பு வாய்ந்தவர்களாக பேச வேண்டும். சாணக்கியன் எம்.பியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மண் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை மறந்துவிட்டார் போல். மாகாணசபை தேர்தலில் போட்டியிட தயாராக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் இன்று முன்வந்து போராடுகின்றனர். மாகணசபை தேர்தல் இல்லாமல் போகவும் அவர்களே காரணம்.

கடந்த காலத்தில் என்னை பழிவாங்கி என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற என்னை சிறையில் அடைத்தனர். ஆனால் மக்கள் மத்தியில் நான் பிரபல்யம் பெற்று அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளேன் என்பதற்காக அதனை சகித்துக்கொள்ள முடியாது இவர்கள் என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்றும், மண் கொள்ளையில் ஈடுபடுகின்றேன் என சித்தரிக்க முயற்சிகின்றனர். தமிழ் தேசிய வாதிகள் என்னை பற்றி பேசும் விடயங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் ஜனாதிபதி உரம் திட்டத்தை முன்னெடுத்தமை வரவேற்கத்தக்கது. ஆனால் இப்போது நாடு இக்கட்டான சூழலில் உள்ளதை மறுக்க முடியாது, ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த சவால்களை நாம் வெற்றிகொள்வோம். ஜனாதிபதியின் உத்தரவையும் பிரதமரின் உத்தரவையும் கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மானிய கொடுப்பனவுகள் குறித்த பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

No comments: