News Just In

8/02/2021 11:24:00 AM

சட்டத்துறை நீதித்துறை நிருவாகத்துறை ஆகிய மூன்று துறைகளும் முறையாக இயங்கி சிறுவர் உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சட்டத்துறை நீதித்துறை நிருவாகத்துறை ஆகிய மூன்று துறைகளும் முறையாக இயங்கி சிறுவர் உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதக் குழு அங்கத்தவர்களுக்கு முரண்பாடு நிலைமாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு எனும் பயிலரங்கும் நிருவாகத் தெரிவும் மட்டக்களப்பு கல்லடி பிரிட்ஜ்வியூ விடுதியில் ஞாயிறன்று 01.08.2021 இடம்பெற்றது.

மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சர்வமதக் குழு அங்கத்தவர்கள் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் தேசிய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ன தேசிய நிகழ்ச்சி இணைப்பாளர் ரஷிகா செனவிரெட்ன நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எஸ். கமலதாசன் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் உட்பட இன்னும் பல வளவாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிறுவர்கள் பெண்கள் மற்றும் வீட்டு வன்முறை தொடர்பான விரிவுரையை நிகழ்த்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் பல்வேறு சட்டங்கள் சிறுவர் என்ற சொல்லை வேறுபட்ட வழிகளில் வரையறுப்பதாகவும் எனினும் 1989ஆம் ஆண்டின் நொவெம்பெர் 20ஆம் திகதிய சிறுவர் உரிமைகள் பட்டயத்தில் 18 வயதிற்குக் குறைந்த அனைத்து மனிதப் பிறவிகளும் சிறுவர்களாவர் என வரையறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 29 வீதமாகவுள்ள சிறுவர்கள் வறுமை யுத்தம் நகரமயமாக்கல் அரசாங்கக் கொள்கைகள் போன்ற அம்சங்களினால் பாதிக்கப்படுவோராக உள்ளனர்.

சுமார் 50 இற்கும் அதிகமான சட்டங்கள் சிறுவர் தொடர்பானதாக இருக்கின்ற போதிலும் 1998ஆம் ஆண்டின் தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபைச் சட்டம் மிகவும் முக்கியமானது” என்றார்.

இந்நிகழ்வில் மாவட்டத்தில் முரண்பாடு ஏற்படக்கூடும் என்று கருதப்படும் இரண்டு பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய மாவட்ட சர்வமதக் குழு அங்கத்தவர்களும் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்கான பிரதிநிதியாக கே. சங்கீதா மற்றும் காத்தான்குடி பிரதேசத்திற்கான பிரதிநிதியாக மத்தியஸ்த சபைத் தலைவர் எம்.ஐ. உசனார் ஆகியோருடன் மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் ஆர். மனோகரன் உட்பட ஏழு பேர் கொண்ட செயற் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.









No comments: