News Just In

7/02/2021 07:41:00 PM

திருகோணமலை- சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது..!!


(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.

கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த சபைக்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பிரேரணை இன்று(2) முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் போது சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டபிளியு.ஏ.ஜயசிரி, மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். இதனூடாக, இந்த சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது.

மொத்தம் 15 உறுப்பினர்களைத் கொண்ட இந்த சபையில் ஐ.தே.கட்சி 6 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 4 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 3 உறுப்பினர்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா ஒரு உறுப்பினரையும் கொண்டிருந்தன.

இன்றைய வாக்கெடுப்பின் போது புதிய தவிசாளருக்கு ஆதரவாக, 9 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேர்ந்த ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வாக்கெடுப்பு இடம்பெற்ற ​வேளையில் திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள, சபையில் பிரசன்னமாகி இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments: