News Just In

7/22/2021 04:01:00 PM

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" எனும் நிலையை இலங்கைக்கு உண்டாக்கும்- மாடறுப்பு தடை!!


இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ள நிலையில், அதற்கு சிலர் பாராட்டுக்களை தெரிவித்தாலும் இன்னும் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் கடந்த வருடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது யோசனை முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் தரப்பினர் எல்லோரும் தலையசைத்தனர். ஆளும் கட்சியிலுள்ள எந்தவொரு உறுப்பினரும், இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என்பதனால் இந்த விடயம் ரொக்கட் வேகத்தில் தீர்மானத்தை நோக்கி நகர்ந்து இப்போது ஒரு எல்லையை வந்தடைந்துள்ளது.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் என்ற ரீதியிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை முன் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை. இலங்கையில் மாடறுப்பு நடவடிக்கைகளை தடை செய்யுமாறு சுதந்திரத்திற்கு பின்னரான காலம் முதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த கோரிக்கைகளை இன்று வரை நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் முக்கிய விடயம். இவ்வாறான நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டுக்கு மேல் ஆசனங்கள் இருக்கின்றமையினால், இந்த யோசனையை விரைவில் நிறைவேற்ற முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

உள்நாட்டு மாட்டிறைச்சி தேவையை பூர்த்தி செய்வதற்காக, மாட்டிறைச்சிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இங்கு மிகப்பெரும் வேடிக்கையாக நோக்கப்படுகிறது. இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவது கூடாது அது மிருக வதை ஆனால் வெளிநாட்டில் மாடுகள் அறுக்கப்படுவது மிருகவதை இல்லையா என்கின்றனர் சிந்திக்கும் திறமை கொண்டவர்கள்.

இலங்கையில் பசுவதைத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட எதிர்பார்த்துள்ளதாக கடந்த வருடம் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்திருந்ததன் மூலம் மாடறுப்பு தடை மூலம் பாதிக்கப்படப்போவது முஸ்லிங்கள் தான் எனும் எண்ணம் ஏனையோரின் மனதில் ஆழமாக பதிந்தது எனலாம். இது தொடர்பில் விளக்கிய சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் எம்.எவ்.எம். ரஸ்மின், ஒவ்வொரு மனிதர்களும் என்ன உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவரவர் உரிமை எனவும், அதில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு தனிநபர்களோ தலையீடு செய்ய முடியாது என்றார். மாடறுப்பு தடை என்பது ஒரு சமூகத்தின் மத உரிமையில் கைவைப்பது மாத்திரமன்றி, இலங்கை நாட்டுக்கும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கும் விடயம் என்பதை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும். மாடு வளர்க்கும் விவசாயிகளில் பெரும்பாலானோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்களாகவே இருக்கிறார்கள் என கூறிய அவர், மாடு வளர்ப்பில் சிறு அளவிலான சிறுபான்மையினரே ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாடு வளர்ப்பில் ஈடுபடும் ஒருவர் மாடு பால் தரும் நிலையில் இருக்கும் வரையிலேயே அதனை பயன்படுத்துவார்கள். பால் தராத முதிய வயதை அடையும் போது அதனை இறைச்சிக்காக விற்றுவிடுவார்கள்
இலங்கையில் மாடறுப்புக்கு தடை கொண்டுவரப்பட்டால் மாடு வளர்க்கும் அப்பாவி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திப்பதுடன், உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை

இலங்கையில் பசுவதைத் தடுப்பு சட்டத்தை கொண்டு வர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானத்தை தான் உள்ளிட்ட சைவ மக்கள் அனைவரும் வரவேற்பதாக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அரசுக்கு தனது பலமான முத்தத்தை கடந்த வருடம் ஆழமாக கொடுத்தார். மட்டுமின்றி பசுவதைத் தடுப்பு சட்டம் தொடர்பிலான தகவல் வெளியானதை அடுத்து, இலங்கை வாழ் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கடந்த வருடமே அவர் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து போராட்டங்கள் நடத்திய தாம், மாட்டிறைச்சி வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இப்படியான பல்வேறு ஆதரவுகள், எதிர்ப்புக்கள் வந்து கொண்டிருந்தாலும் ஒரு ஜனாதிபதியாக களுத்துறை பயாகல இந்துக் கல்லூரியின் தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இலங்கையில் மாடறுப்பது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். மாடறுப்பதைத் தடை செய்துவிட்டு உணவுக்காக மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு குறித்து தான் நிதியமைச்சரிடம் ஆலோசனை கூறியதாகவும் குறிப்பிட்டார்.

மஹிந்த ஆட்சியில் மாடறுப்பைத் தடுக்க வேண்டும் என பல இனத்தவர்கள் பலமான கோரிக்கையை முன்வைத்த போதும் இதற்காக பௌத்த தேரர் ஒருவர் தீக்குளித்து மரணித்த போதும் கூட அவர் இப்படியொரு வார்த்தையை வெளியிடவில்லை. 99% முஸ்லிம்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய நல்லாட்சியின் ஜனாதிபதி இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பது பாரிய அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மாட்டிறைச்சி அரசியல் ஆரம்பித்து விட்டதையே இது எடுத்துரைக்கின்றது என மஹிந்த ஆதரவாளர்கள் பலரும் அப்போது கருத்து அம்புகளை வீசிக்கொண்டிருந்தனர்.

இலங்கையில் உள்ள இனவாதிகள் மட்டுமன்றி நல்ல பல சிங்கள, தமிழ் மக்களும் மாடுகள் அறுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர் என்பது உண்மையே! இருப்பினும் இந்துக் கல்லூரி தைப்பொங்கல் திருவிழாவில் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதன் மூலம், தமிழ், பௌத்த மக்களை மட்டுமன்றி இனவாதிகளையும் திருப்திப்படுத்துவதனூடாக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பலவீனமான மனநிலைக்கு அவர் சென்றிருப்பதையே அன்று எடுத்துக் காட்டியது.

உண்மையில் பௌத்த தர்மத்திற்காக மாடுகள் அறுக்கப்படுவதை எதிர்ப்பது மிகக் குறைவு என்றே கூற வேண்டும். கொல்லாமை கூடாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இக்கருத்து முன்வைக்கப்பட்டிருந்தால் மீன் பிடிப்பது, இறைச்சிக்காக கோழிகள் அறுக்கப்படுவது மரக்கறிகளை உண்பது என அனைத்தையும் சேர்த்தே கண்டிக்க வேண்டும். ஆனால், அப்படி நடப்பதில்லை.

பௌத்த போதனைக்காக மாடுகள் அறுக்கப்படுவது எதிர்க்கப்பட்டால் அதை விட வீரியமாக மது விற்பனைக்கு எதிர்ப்பாக இவர்கள் போராட வேண்டும். எல்லா மதங்களும் எதிர்க்கும் மதுபான சாலைகளைத் தாராளமாகத் திறந்து வைத்துக் கொண்டு மாடறுப்புக்கு எதிராகக் கோஷம் எழுப்புவது வெறும் வேஷமே ஒழிய வேறில்லை.
இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவதை இலங்கை மக்கள் விரும்பாவிட்டால் இலங்கை மக்களுக்காக வெளிநாடு ஒன்றில் மாடுகள் அறுக்கப்படுவதை எப்படி சரி காண முடியும்?

இங்கே ஒரு வியாபாரம் நடக்கப் போகின்றது. மாட்டிறைச்சி விற்பனை மூலமாக முஸ்லிம்களே ஆதாயம் தேடி வருகின்றனர். அதைத் தடுத்துவிட்டு யாரோ ஒரு சில பண முதலைகளும், அரசியல் சக்திகளும் மாட்டிறைச்சி இறக்குமதி மூலம் கொள்ளை இலாபம் அடையப் பார்க்கின்றனர். இந்த சுரண்டலுக்குத்தான் மதவாதமும், இனவாதமும், பசு மீதான பாசமும் தூண்டி விடப்படுகின்றன என்பது வெளிப்படையான உண்மை. இந்தியாவில் மாடுகள் அறுக்கப்படுவதைத் தீவிரமாக எதிர்ப்பவர்கள்தான், முஸ்லிம் பெயர்களில் அரபு நாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்றனர். இலங்கையிலும் இந்தச் சுரண்டல் ஆரம்பமாகப் போகின்றது என்பதுதான் மறைமுக அஜந்தாவாக இருக்கும்.

இது முஸ்லிம்களைக் குறிவைத்துப் பாயும் சட்டம் என்றாலும் நாட்டுக்கு இதனால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. நாட்டுக்கு இதனால் பலத்த பாதிப்பு ஏற்படப் போவது மட்டும் திண்ணம். இலங்கையில் சுமார் பதினையாயிரம் மாட்டிறைச்சிக் கடைகள் இருப்பதாக உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். ஒரு கடை மூலம் குறைந்தது. ஒரு லட்சம் உள்ளுராட்சி மன்றத்திற்கு வருமானமாக கிடைக்கின்றது என்றால் இதனால் அரசு இழக்க நேரிடும் வருமானம் என்பதையும் அது மட்டுமன்றி இதனுடன் தொடர்புபட்ட தொழிலாளர்களும் தொழிலை இழக்க நேரிடும் என்பதையும் சிந்தித்து பார்த்தால் விளங்கக்கூடியதாக இருக்கும்.

ஒரு நாளைக்கு சுமார் 10,000 மாடுகள் அறுக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் மாதாந்தம் சுமார் மூன்று இலட்சம் மாடுகள் அறுக்கப்படுவது தவிர்க்கப்படுவதால் மாடுகள் பெருகிவிடும். மாடுகள் பெருகும் போது அவற்றுக்காக உணவு, தண்ணீர், பாராமரிப்பு என பலத்த சவால்களையும் இழப்புக்களையும் நாம் எதிர்கொள்ள நேரிடும். இது ஒரு புறமிருக்க பெண் மாடு மூலமாக பால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இயந்திர உலகில் ஆண் மாடுகள் மூலமாக முன்னைய காலம் போன்று வண்டி ஓட்டமுடியாது விவசாயமும் செய்ய முடியாது. ஆண் மாடுகள் மூலம் இறைச்சும் பெற முடியாது என்றால் அவற்றை என்னதான் செய்வது? பசுக்கள் பால் தர முடியாத நிலையை அடைந்துவிட்டால் என்ன செய்வது? பெற்ற தாய் தந்தையையே கவனிக்காத சமூகம் முதியோர் இல்லங்களை தேடி அலையும் பாவிகள் வாழும் இந்த நாட்டில் எந்த இலாபமும் இல்லாமல் மாட்டை வைத்துப் பராமரிக்கும் நிலையில் நமது பண்ணையாளர்கள் இருப்பார்களா?

ஒரு இனம் அளவுக்கு மீறி அதிகரித்து விட்டால் அந்த இனம் தானாகவே அழிய ஆரம்பிக்கும். மாடுகள் பெருகி ஒரு கட்டத்தில் உணவின்றி இறக்கும் நிலைக்கும் உள்ளாகலாம். இதற்கும் ஒரு மாற்று வழி கூறுவார்கள், இலங்கையில் இருந்து உயிருடன் மாட்டை ஏற்றுமதி செய்து பின்னர் வெளிநாட்டில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டும். மாட்டைக் கொல்வதற்காக ஏற்றுமதி செய்வதை விட அதை எமது நாட்டில் நாமே செய்து கொள்ளலாமே. மாடுகளை உயிருடன் ஏற்றுமதி செய்து இறைச்சியை இறக்குமதி செய்வதாக அல்லது இறைச்சியை மட்டும் இறக்குமதி செய்வதாக வைத்துக் கொள்வோம். இதனால் அதிக செலவினத்தையும், நஷ்டத்தையும், தேவையில்லாத விலையுயர்வையுமல்லவா நாம் சந்திக்கப் போகின்றோம்? ஏன் இது புரிவதில்லை என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் இலங்கையில் இப்போது இருக்கும் விலையை விட அதிக விலை கொடுத்தே மாமிசத்தை வாங்கும் நிலை ஏற்படும். உள்நாட்டில் தாராளமான வளம் இருக்கும் போது, வெளிநாட்டிலிருந்து ஒன்றை இறக்குமதி செய்து கூடிய விலைக்கு அதை மக்களுக்கு கொடுப்பது நல்லதொரு அரசின் பணியாக ஒரு போதும் இருக்காது. நாட்டுக்கும், நாட்டு வளத்திற்கும், பொருளாதார வளத்திற்கும் மக்களுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகமாக அல்லவா அமையும்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டால் பழைய பதப்படுத்தப்பட்ட இறைச்சியையே மக்கள் தொடர்ச்சியாக உண்ண நேரிடும். நாட்டிலே இதற்கு நல்ல வளம் இருக்கும் போது பதப்படுத்தப்பட்ட பழைய இறைச்சியை நாட்டு மக்களுக்கு வழங்கி நோய்க்கான பக்கவிளைவுகளையும் நோயையும் உண்டு பண்ணி ஆரோக்கியமற்ற மக்கள் வளத்தை உருவாக்குவது தான் ஜனநாயக சோஷலிச குடியரசின் இலட்சணமா?

ஒரு வேளை வெளிநாட்டிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டால் ஹலால் முறையில் அறுக்கப்பட்டது தானா? என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியாக ஏற்படும். இந்த நிலைமை இறைச்சி விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதையும் ஒருபுறம் சிந்திக்க வேண்டும். எந்தத் திசையில் நோக்கினாலும் இனவாதிகளை திருப்திப்படுத்துதல், ஏற்றுமதி-இறக்குமதி மூலம் வியாபார வியூகம் அமைத்தல் என்பதைத் தவிர இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையும் விளையப்போவதில்லை.

ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் திருமண சட்டம், மதரஸா சட்டங்கள் என முஸ்லிங்களின் அடிப்படை உரிமைகளில் கைவைக்கும் நோக்குடன் பிற்போக்கு சிந்தனை கொண்ட இனவாதிகளும், ஜனாதிபதியுடன் கூட இருக்கும் சிலரும், முஸ்லிம்களின் வெறுப்பைப் பெறத்தக்க தீர்மானங்களின் பக்கம் அரசை திசை திருப்பி அதன் மூலம் முஸ்லிம்களின் பொறுப்பை அவர் சம்பாதிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கடந்த காலங்களில் கலகட அத்தே ஞானசார தேரரை கொண்டு செய்த செயல்களினால் பெற்றது போன்று முஸ்லிம்களின் வெறுப்பை அவர் பெற்று விட்டால் அதன் மூலம் மஹிந்த அரசின் அரசியலை அஸ்தமிக்கச் செய்து விட்டு மீண்டும் ஒரு வேதாளத்தை முருங்கை மரத்தில் ஏற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். அந்த சதி வலைக்குள் ராஜபக்ஸக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அறியாமல் உள்வாங்கப்படுகின்றாரோ என்ற சந்தேகமும் இந்த பொழுதுகளில் எழுகின்றது.

எனவே, நாட்டு மக்களின் நல்லபிப்பிராயத்தை வென்றெடுத்த அதிலும் குறிப்பாக சிங்கள மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், விளையாட்டமைச்சர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என இந்த நாட்டின் அதனை முக்கிய பதவிகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் இந்த அரசாங்கம் எடுத்திருக்கும் சிங்கள மக்களை நேரடியாக பாதிக்கும் தனது முடிவினை மீள் பரிசீலனை செய்வதோடு இனவாத சிந்தனைகள் தலைதூக்க இடமளிக்காமல் சகல இன மக்களும் சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும், சகவாழ்வுடனும் வாழ வழி செய்ய வேண்டும் என்ற வேண்டுதல் சகல இலங்கையர்களிடமும் இப்போது இருக்கிறது.

இலங்கையில் 10 வீதத்துக்கும் குறைவாக வாழும் முஸ்லிங்கள் தினமும் எத்தனை மாட்டின் இறைச்சியை சாப்பிடுகின்றனர் என்பதை நன்றாக ஆராய்ந்தால் மாட்டிறைச்சி மூலம் பாதிக்கப்படுகிறார்கள் யார் என்பது தெரியவரும்." முஸ்லிங்களும் மாட்டிறைச்சியை பகிஷ்கரிப்போம். அதன் மூலம் இந்த நாட்டில் மாட்டு இறைச்சி மூலம் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிங்கள் இல்லை என்பதை நிறுப்பிக்கலாம். என்று முஸ்லிங்கள் ஒற்றை தீர்மானம் எடுத்தால் மாட்டு இறைச்சி மூலம் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மை இன மக்கள் என்பதை காலம் உணர்த்தும். பால்மா இறக்குமதி முதல் பல ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் பாதிக்கப்படும் பின்னர் நாட்டின் பொருளாதார நிலை கேள்விக்குறியாக மாறும்.

இந்த மாட்டிறைச்சி பிரச்சினை மூலம் ஒரு இனத்தவரை வட்டமிட முனையும் இனவாத போக்குள்ளோர் நன்றாகவும் ஆழமாகவும் இவ்விடயத்தை சிந்திக்க மறந்துள்ளனர். இந்த மாட்டிறைச்சி பிரச்சினை மூலம் நாட்டின் சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம் என்பன வெகுவாக பாதிக்கப்பட்டு மாற்றுவழி தேட அண்மைய நாடுகளை எமது அரசு நாடவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதன் மூலம் இயற்கை வளம் நிறைந்த இலங்கையை அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவர் என்பதை இந்த பிற்போக்குள்ளவர்கள் அறியாமல் இருப்பது அவர்களின் அறியாமையே.

மாடுகள் அறுக்கப்படாமல் விட்டால் வெகுவாக இனப்பெருக்கம் நடைபெறுவதால் 5 அல்லது 6 வருடங்களில் இலங்கை சனத்தொகையை ஒத்த மாடுகள் இலங்கையில் உருவாகும் அதன் பின்னர் மிருகத்தின் மீது பாசம் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் மாடுகளுக்கான வைத்தியசாலை, மாடுகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை, மாடுகளுக்கான ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்களை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகும். மிருகத்தை வதை செய்ய கூடாது என்று கூச்சல் இடுவோர் பால்கறக்கவும் விட மாட்டார்கள். அதன்மூலம் நிறைய மாடுகள் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும். இதன்மூலம் நாட்டின் சுகாதாரம் சீர்கெடும். இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாத்துறை இழுத்து மூடப்படும். கொலஸ்டரோல், பிரஷரை நம்பி திறக்கப்பட்ட நிறைய தனியார் வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை சந்திக்கும்.

நாட்டின் பல நிறுவனங்கலும், உள்ளுராட்சி மன்றங்களும் வருமானம் இன்றிய நிலைக்கு தள்ளப்படும். இதன் மூலம் அண்டைய நாடுகளிடம் கையேந்தி வாழும் நிலைக்கு இலங்கை தள்ளப்படும். உச்ச அதிகாரத்தை கையில் வைத்திருந்த ஐக்கிய அமெரிக்கா ஒருவகை மான் இனத்துக்கும் இவ்வாறான தடையை அமுல்படுத்தி அதன் மூலம் அந்த நாடு அடைந்த இன்னல்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளதை யாரும் மறுக்க மாட்டார்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்றி நாடு சோமாலியா,எத்தியோப்பியா போன்ற நாடுகளுடன் இணைந்து கொள்ளும் என்பதை இவர்கள் அறியாமலும் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு இயற்கை சங்கிலி சரியாக நடப்பதும் காலத்தின் கட்டாயம். அரசாங்கம் சிந்திக்க வேண்டும். முஸ்லிங்களுக்கு மாட்டிறைச்சி என்பது மார்க்க கடமையல்ல.விருப்பமான உணவு மட்டுமே. நாட்டை மீட்க தூய சிந்தனை அவசியமாகிறது.

No comments: