News Just In

6/25/2021 10:02:00 PM

இலங்கையின் தடுப்பூசி கொள்வனவு முறைமைக்கு உலக வங்கி பாராட்டு...!!


கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் கொள்முதல் நடைமுறைகளில், இலங்கை பின்பற்றும் முறைமை குறித்து, உலக வங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும்போது பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை மற்றும் முறைமை காரணமாக,
தெற்காசிய நாடுகளில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது,
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தை முன்னிலையில் உள்ள ஒரு நிறுவனமாக உலக வங்கி அடையாளப்படுத்தியுள்ளது என கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இதற்காக வழங்கப்படும் அங்கீகாரமாக, தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் போது, உலக வங்கியின் இணையத்தளத்தின் ஊடாகக் கொடுப்பனவுகளைச் செய்வதற்கான வாய்ப்பு, இலங்கைக்குக் கிடைத்துள்ளது என்பதனையும் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

கொவிட் ஒழிப்பு சிறப்புச் செயலணி இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடிய போதே, இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த மாதம் ஆரம்பம் முதல் செப்டெம்பர் மாதம் வரையில், சைனோஃபாம், சைனோவெக், ஸ்பூட்னிக் உள்ளிட்ட 17 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அந்தத் தடுப்பூசிகளை, நாடளாவிய ரீதியில் அதிகளவானோருக்குக் குறுகிய காலப்பகுதியில் வழங்க, துரித நிகழ்ச்சித்திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கையை, தெரிவு செய்யப்பட்ட வைத்திசாலைகளின் ஊடாக மேற்கொள்வதற்கான முன்மொழிவொன்றை -
இன்று பிற்பகல் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்க உள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய இதன் போது தெரிவித்தார்.

இதன் மூலம், நாளொன்றின் பெரும்பகுதி நேரத்திற்கு மகளால் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியுமாக இருக்கும் என்றும், அதற்கு மருத்துவர்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், வைத்தியர் பாதெனிய குறிப்பிட்டார்.

அமைச்சர்களான காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அழுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன, ரமேஷ் பத்திரன, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க ஆகியோரும் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.





No comments: