எனவே தாதிகள் உள்ளிட்ட கொவிட் கட்டுப்பாட்டு சேவையில் நேரடியாக ஈடுபடுகின்ற சகல சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு அறிவிக்காவிட்டால், இன்று காலை முதல் கொவிட் கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய சகல சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
மேல் மாகாணத்தில் 20 சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்ற போதே , சுகாதார அமைச்சின் செயலாளரை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு சுகாதார சேவையில் ஈடுபடுகின்ற வைத்தியர்கள் மாத்திரமின்றி தாதிகள் உள்ளிட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தினோம்.
இவர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. இவ்வாறான சூழலில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களையும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களை மாத்திரம் பாதுகாக்கும் வகையில் சுகாதார அமைச்சு செயற்படுகின்றமைக்கு நாம் கடும் அதிருப்தியை வெளியிடுகின்றோம்.
இதன் காரணமாக நேற்று திங்கட்கிழமை தடுப்பூசி வேலைத்திட்டங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் எவ்வித தொழிநுட்ப ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. இது தொடர்பில் தாதியர் சங்கம் , விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய சகல சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்குவதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிட்டால் , இன்று செவ்வாய்கிழமை காலை 6.30 மணி முதல் சகல கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளிலிருந்தும் பொது சுகாதார பரிசோதகர்கள் விலகிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கொவிட் கட்டுப்பாட்டு செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சகல சுகாதார ஊழியர்களுக்கும் முதற்கட்ட தடுப்பூசியை வழங்கியதன் பின்னரே , அவர்களின் குடும்பத்தாருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். தபால் திணைக்களம் , புகையிரத திணைக்களம், போக்குவரத்துசபை, ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
No comments: