News Just In

5/28/2021 05:26:00 PM

பெற்றோர்களே! பிள்ளைகளின் இணையவழி கற்றலுக்கு உதவலாம் வாங்க...!!- கட்டுரை


இன்று நாம் நவீன தொழிநுட்ப சாதனங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நவீன தொழிநுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது பல நன்மைகளை எமக்கு அளித்தாலும் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதில் தடையாகவும் மனிதருக்கிடையிலான தொடர்பாடல் குறைவடைந்து செல்வதற்குக் காரணமாகவும் அமைகின்றது என்ற கருத்தும் மேலோங்கத்தான் செய்கின்றது. இருந்தாலும் இன்றைய சூழலில் மாணவர்களைப் பொறுத்தவரையில் நவீன தொழிநுட்ப சாதனங்களின் பயன்பாடு என்பது காலத்தின் கட்டாயமாகும்.


இன்றைய அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்களின் பாடசாலைக் கல்வி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வி அமைச்சினால் தொலைக்காட்சியினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை வலயக் கல்வி அலுவலகங்களினாலும் பாடசாலைகளினாலும் இணையவழி (Online) கற்றலுக்கான வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கல்வி தொடக்கம் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர் வரையில் Zoom, WhatsApp போன்ற மென்பொருள்களுடாகவும் செயலட்டைகளை வழங்குவதனூடாகவும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும்வேளையில் தத்தமது வீடுகளிலிருந்து அவற்றைக் கற்றுக்கொள்வதற்கான சாதகமானதும் பாதுகாப்பானதுமான சூழலொன்றை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது பெற்றோர்களி;ன் முக்கிய கடமையுமாகும். அந்தவகையில் கணினி அல்லது கைபேசியை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வழங்கினால் மட்டும் போதாது. அத்துடன் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்? எவ்வாறான வழிகாட்டல்களை மேற்கொள்ளவேண்டும் என்பது பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

முதலில் பிள்ளைகள் கற்பதற்குப் பொருத்தமான இடமொன்றைத் வீட்டில் தெரிவுசெய்து கொள்வது முக்கியமானதாகும். சில பெற்றோர் பிள்ளைகளின் கற்றலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியறையொன்றை வழங்க முன்வருகின்றனர். இது சில சந்தர்ப்பங்களில் பிள்ளையின் தவறான செயற்பாடுகளுக்குக் காரணமாகவும் அமையலாம். இணையவழி வகுப்பு நடைபெறும்போது சக மாணவர்களுடன் அரட்டை (Chat) செய்யவும் அதேவேளை வேறு சமூக வலைத்தளங்களைப் பார்வையிடவும் மற்றும் வீடியோ ஒலிவாங்கி (Mic) ஆகியவற்றை மூடிவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடவும் சந்தர்ப்பம் உள்ளது.

மேலும் இணையத்தளங்களில் சுமார் 1/8 சிற்றின்பம் சம்பந்தமாகவே உள்ளதாகவும் 18 வயதிற்குள்ளாகவே 83 சதவீதமான சிறுவர்களும் 57 சதவீதமான சிறுமியர்களும் குழு பாலுறவுப் படங்களை வலைத்தளங்களில் பார்ப்பதாகவும் ஆய்வொன்று தெரிவிக்கின்றது. ஆகவே இதுபோன்ற தவறாக செயற்பாடுகளில் பிள்ளைகள் ஈடுபடுவதைத் தவிர்க்கும்பொருட்டு இணையவழி கற்றலை மேற்கொள்வதற்குப் பொருத்தமான இடமொன்றினை தெரிவு செய்யவேண்டும். உதாரணமாக வீட்டின் மண்டபத்தில் கணினியை அல்லது கைபேசியை வைத்து இணையவழி கற்றலை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கும்போது பெற்றோர் பிள்ளையின் நடவடிக்கைகளை கண்காணிக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். கற்றலுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் மண்டபத்தில் குடும்ப உறவினர்களின் நடமாட்டம் இருப்பதனால் பிள்ளையும் தனிமையை உணராது கற்றலில் ஈடுபடக்கூடியதாகவும் இருக்கும். பெரும்பாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் பிள்ளைகளைத் தவறு செய்யத் தூண்டுகின்றன.

பிள்ளைகளில் பெரும்பாலானோர் கைபேசிகளை பயன்படுத்தியே இணையவழி கற்றலில் ஈடுபடுகின்றனர். பல பெற்றோர் பிள்ளைகளுக்குக் கைபேசியை கொடுத்த பின்னர் பிள்ளை தேவையற்ற விடயங்களைப் பார்த்துவிடுமோ என்ற ஒருவித பதட்டமும் அவர்களிடம் காணப்படுகின்றது. ஆகவே பிள்ளைகள் கற்றலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது ஏனைய வலைத்தளங்களுக்குள் அவர்களால் செல்ல முடியாதவாறு தடுக்க கைபேசியிலுள்ள Settings ஒன்றைச் செயற்படுத்திக் கொள்ளவும் முடியும். அதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என்ற வழிமுறைகளைப் பார்ப்போம்.

முதலில் உங்கள் கைபேசிக்கு Password அல்லது Fingerprint அல்லது இரண்டையும் கொடுத்து இரகசியமாக வைத்திருங்கள். அதன்பின் Phone Settings ஐ திறந்து அதனுள் Search என்பதில் Screen Pinning என Type செய்தால் Screen Pinning எனும் Option ஐ காணலாம்.



பின்னர் அதனை Open செய்து Off இலுள்ள இரு Option களையும் On செய்யுங்கள். இப்போது Back வாருங்கள்.

இப்போது Security Settings தயார். Zoom> WhatsApp, YouTube அல்லது ஏதாவதொரு மென்பொருளைத் திறந்து. பின் அதனை Minimize செய்யுங்கள். இப்போது Minimize செய்யப்பட்டவற்றில் Pin ஒன்றினது Icon ஐ கீழ்ப் பகுதியில் நீங்கள் காணலாம்.



அதனை விரலால் தொட Screen Pinned என்ற Popup வரும். அதற்கு Ok கொடுங்கள். இனி குறித்த மென்பொருளிலிருந்து வெளியே வரமுடியாது. அதிலிருந்து வெளியே வர வேண்டுமானால் கீழுள்ள Back Icon ஐ சற்று நேரம் அழுத்திப் பிடிக்கவேண்டும். இனி கைபேசிக்குரிய Password அல்லது Fingerprint கொடுத்தால்தான் அது இயங்கும்.

மேற்கூறியவாறு Screen Pinning செய்து பிள்ளையிடம் கைபேசியை கொடுப்பதனால் பிள்ளை ஏனைய வலைத்தளங்களுக்குள் செல்லாது குறித்த தளத்திலிருந்து முழுமையாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட வாய்ப்புண்டாகும். பெற்றோரும் நிம்மதியாக தங்கள் வேலைகளை மேற்கொள்ளவும் முடியும்.

அடுத்து இணையவழி கற்றலின்போது எவ்வாறு பிள்ளைகள் நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியும் நாம் அறிந்திருப்பது நல்லது. கணினி அல்லது கைபேசியைப் பயன்படுத்தும்போது பிள்ளையின் கண் மட்டத்திற்குச் சமமான உயரத்தில் அவற்றை வைத்துக்கொள்ளவேண்டும். கணினிக்கும் பிள்ளைக்குமான இடைவெளியை 20' அங்குலமாகப் பேணுவது நலம். 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை சற்று ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் சாதாரண நேரங்களில் நாம் கண்களை அடிக்கடி இமைப்பது வழக்கம். ஆனால் இவ்வாறு இணையவழி கற்றலில் ஈடுபடும்போது கணினி அல்லது கைபேசியை உற்றுநோக்கிக் கொண்டிருப்பதனால் கண்களை இமைப்பது வெகுவாகக் குறைவடையும். இதனால் கண்களில் வரட்சி ஏற்பட்டு கண்கோளாறுகளுக்கும் உள்ளாகலாம். மேலும் கண் வலி, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் உண்டாகலாம்.

கற்றலின்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு நிமிடமளவில் ஓய்வெடுப்பது சிறந்தது. இவ்வேளையில் 20 செக்கன்கள் பச்சைப்பசேலான மரஞ்செடி கொடிகள், வான்வெளி போன்றவற்றை அவதானிக்கலாம். 20 செக்கன்கள் இருக்கையிலிருந்து எழுந்து சற்று நடக்கலாம். மேலும் 20 செக்கன்கள் கண்களை மூடிக்கொள்ளுதல், கண்களை இமைத்தல் போன்ற செயற்பாடுகளுடாக பிள்ளைகள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் நலன்கருதி 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு நிமிடம் ஓய்வை வழங்குவதன் மூலமும் அவர்களை ஊக்கப்படுத்தமுடியும்.

இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளும்போது மாணவர்கள் குழப்பமடையாது இரு கற்றல் செயற்பாடுகளிலும் இணைந்து பயன்பெறக்கூடியதாகவும் இருக்கும். சில பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புக்களுக்கும் நேரத்தை ஒதுக்கவேண்டிய நிலையும் காணப்படுகின்றது. பிள்ளைகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதனாலும் மற்றும் பாடரீதியாக அளவுக்கதிகமாக வேலைப்பளுவைப் பிள்ளைகள் மீது சுமத்துவதினாலும் அவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பமும் உருவாகலாம் என்பதையும் பெற்றோர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.

வகுப்பறை கற்றல் கற்பித்தல் வழிமுறைக்குப் பழக்கப்பட்ட எமது பிள்ளைகளை இணையவழி கற்றல் கற்பித்தல் முறைக்கு இட்டுச் செல்வதாயின் அச்செயற்பாட்டினை படிப்படியாகவே மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் பிள்ளைகள் உடல், உளரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாக நேரிடுவதுடன் அவர்களது எதிர்காலமும் வேள்விக்குறியாகலாம்.

சிந்திப்போம்! செயற்படுவோம்!

முத்துராஜா புவிராஜா
முதன்மை உளவளத்துணையாளர்














No comments: