News Just In

5/16/2021 11:36:00 AM

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மு.கா சார்பிலான எந்த உறுப்பினரும் நியமிக்கப்படாமை ஏன் ? கேள்வியெழுப்புகிறார் ஆரிப் சம்சுதீன்!!


நூருல் ஹுதா உமர் / மாளிகைக்காடு நிருபர்
முஸ்லிங்களின் எதிர்கால சந்ததிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கவேண்டி தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டிய விடயம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான எந்தவித உறுப்பினரும் நியமிக்கப்படாமை எங்களுக்கு இப்போது பிணக்காக இருக்கிறது. பொதுஜன பெரமுன சார்பில் அமைச்சர் அலி சப்ரியும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்னாள் அமைச்சர் கபீர் காஸிம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் ஐவர் இருந்தும் அதில் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது எங்களுக்கு மிகப்பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. 

 இதற்கு என்ன காரணம் என்றால் எங்களின் எம்.பிக்களில் நால்வர் அரசுடன் இணைந்து சுகபோகங்களை அனுபவிப்பதும் தலைவர் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டிருப்பதும் தான் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். அம்பாறை ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1984/6 காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி முக்கிய விடயங்களை பேச கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் முஸ்லிங்கள் சார்பில் பேச யாரும் அனுமதிக்கப்படாமையினாலையே தனித்துவமான எங்களின் பயணம் ஆரம்பமாக வேண்டி இருந்தது. தனித்துவமாக பயணிக்கும் மனோ கணேசன் அவரின் கூட்டமைப்பின் சார்பில் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். ஒழுக்கமாக, ஒரே நிலைப்பாட்டில் அவர்கள் இருப்பதனால் அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள், மலையக மக்களுக்காக ஜீவன் தொண்டமான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள், ஜே.வி.பியின் மூன்று எம்.பிக்களில் இரண்டு பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். எங்களுக்கான வாய்ப்பு இல்லாமல் போனது கவலையளிக்கிறது.

அமைச்சர் அலிசப்ரியும், முன்னாள் அமைச்சர் கபீர் காஸிமும் முஸ்லிங்களின் நிலைப்பாட்டை சரியாக எடுத்துரைப்பார்களா எனும் அச்சம் எங்களிடமிருக்கிறது. ஏன் முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தல் சீர்திருத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறவில்லை எனும் விளக்கத்தை எங்களின் கட்சி செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரிடம் வினவ உள்ளேன்.

மேலும் சாணக்கியனின் அண்மையை உரை தொடர்பில் ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளித்துக்கொண்டிருந்த போது சாணக்கியன் முஸ்லிங்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார். தைரியமாக குரல் எழுப்பிய சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுமந்திரன் ஆகியோரும் குரல் கொடுத்தார்கள். அவர்களை முஸ்லிங்களாகிய நாங்கள் மதிக்கிறோம். கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பிலான கருத்து பிழையாக இருந்தாலும் அதனை நேரடியாக தொடர்புகொண்டு எந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன என்பதை அறிய உள்ளேன். கல்முனை உப பிரதேச செயலகம் என்பது கிளறினால் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்- முஸ்லிம் உறவை பிரிக்கும் மையப்புள்ளியாக இது இருந்து வருகிறது

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக இணைந்து அரசியல் செய்ய வேண்டும், ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும்.அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை உண்டாக்க பாடுபடுகிறோம். புரிந்துணர்வின்மையினால் அது கரையான் போன்று இருந்துவருகிறது. பெருந்தேசிய வாதமும் இதற்கு எதிராக உள்ளது. கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்பது வியாழேந்திரன், கருணா, ஹரீஸ் போன்றவர்கள் இதுவரை எடுத்துக்கொண்ட பிரச்சினையாக இருந்து வந்தது. அதனை இப்போது சாணக்கியன், சுமந்திரன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விக்னேஸ்வரன் ஆகியோரும் இப்போது கையிலெடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழவேண்டும் என்று கூறிக்கொண்டு மறுமுனையில் கல்முனையில் பிரிந்திருந்திருக்க வேண்டும் என்று கேட்பது எவ்வகையில் நியாயம். 60 வீதமான மக்களுக்கு 30 வீதமான நிலப்பரப்பும், 37 வீதமான மக்களுக்கு 60 வீதமான நிலப்பரப்பும் கேட்பது அநீதியான, இனவாத ரீதியான நயவஞ்சக போக்கினை காட்டுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை. கல்முனை பல்லினம் வாழும் நகரம். அதனை அப்படியே பாதுகாப்பதா? இல்லை குரங்கின் கையில் அகப்பட்ட பூ மாலையாக கல்முனையை மாற்றுவதா? இல்லை யாருக்கும் நன்மை பயக்காத வகையில் கல்முனையை மாற்றுவதா எனும் கேள்வி எமக்கு எழுகிறது.

20 நாட்களான குழந்தையின் ஜனாஸா எரிக்கப்பட்டபோது தனது சொந்தப்பிள்ளை எரியூட்டப்பட்டது போன்று கொதித்த சாணக்கியன், சுமந்திரன் போன்றோர் வியாழேந்திரன், கருணா, ஹரீஸ் போன்று செயற்பட்டது வேதனையளிக்கிறது. அந்த பிரதேச செயலகம் விடுதலை புலிகளின் ஆயுதமுனையில் வன்முறையின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டது. அதற்கு நியாயம் கற்பிக்க முடியாது. அதிகாரப்பூர்வமான பிரிப்புக்கள் 1987க்கு முன்னர் இருந்திருக்கிறது. பிரிக்க எத்தணிப்பதாக இருந்தால் அந்த புள்ளியில் இருந்துதான் பிரிக்க முனையவேண்டும். பிரிப்பதில் எனக்கு எவ்வித உடன்பாடுகளை இல்லை. எமது நகரில் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே எனது வாதம் என்றார்.

No comments: