News Just In

5/17/2021 10:24:00 AM

இறக்காமத்தில் சர்ச்சையான பிரதமரின் பெயர் பொறித்த நினைவுக்கல் : விடயம் தொடர்பில் பிரதேச சபை உபதவிசாளர் விளக்கமளித்தார்!!


நூறுல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேச சபைக்கு வாகனத் தரிப்பிடம் இல்லை என்பதனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் ஆகியோர்களின் பெயர்களை கொண்ட நினைவுக்கல்லும் கொடியேற்றும் கம்பமும் அகற்றப்பட்டு அங்கு வாகன தரிப்பிடம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்காக வேறு ஒரு இடத்தை தெரிவு செய்யலாம். அதை விடுத்து அந்த நினைவுக்கல்லை அகற்றினால் அகற்றுவோருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் இறக்காமம் பிரதேச சபையின் முகத் தோற்ற அழகு கெடும் அபாயம் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை தலைவராக கொண்ட தேசிய காங்கிரசின் கடந்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக களமிறங்கியவரும் இறக்காமம் பிரதேச அக்கட்சி முக்கியஸ்தருமான அல்ஹாபிழ் கே.எல். சமீம் எல்.எல்.பி. பகிரங்கமாக இறக்காமம் பிரதேச சபைக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

மேலும் தனது அறிக்கையில் இன்று (16) புலனாய்வுப்பிரிவிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு நிலமையை விளக்கினேன். நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ், அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் என்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை அகற்ற இச் சபையின் 38 ஆவது அமர்வில் 7 ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற விடயத்தை என்னுடன் தொடர்பை ஏற்படுத்திய புலனாய்ப் பிரிவு அதிகாரியிடம் தெரிவித்தேன். அகற்றல் நடவடிக்கை இடம் பெற்றால் மீண்டும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இருந்தாலும் இந்த நினைவுக்கல்லை அகற்ற ஒருபோதும் விடமாட்டேன். அவர்களினால் அது முடியாத காரியம் என்றார்.

இது தொடர்பில் இறக்காமம் பிரதேச சபையின் உபதவிசாளர் மௌலவி ஏ.எல். நௌபர் அறிக்கையின் மூலம் விளக்கமொன்றை முன்வைத்துள்ளார். அந்த அறிக்கையில் சபையின் தீர்மானங்களை பிழையாக மக்கள் மயப்படுத்தி யாரும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட வேண்டாம்.கே.எல். சமீம் என்பவரால் அவரின் முகப்புத்தகத்தில் இடப்பட்ட பதிவு சபையின் கௌரவ தவிசாளரையும், உறுப்பினர்களையும் அரசாங்கத்திடத்திலும், மக்கள் மத்தியிலும் பிழையாக எடுத்துக்காட்டும் ஒரு சமூக துரோக பதிவும், செயற்பாடுமாகும்.

அதாவது கடந்த சபையின் 38/07 தீர்மானமாக "எமது பிரதேச சபையின் வாகனத்தினையும், உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி வைப்பதற்கு வாகனத்தரிப்பிடம் ஒன்று எமது பிரதேச சபை வளாகத்தினுள் அமைப்பதற்கும் குறித்த இடத்திலுள்ள நினைவுக் கல்லினை அகற்றி (நகர்த்தி) பிரதேச சபையின் வளாகத்தின் முன்பாக வேறொரு இடத்தில் நடுவதற்கும் சபை அனுமதி வழங்கியது". இதுவே சபையின் தீர்மானமாகும். குறித்த விடயத்தினை சகோதரர் கே.எல். சமீம் என்பவர் சபையின் தீர்மானத்தை பிழையாக முகநூலில் பதிவேற்றம் செய்து பொது மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை வழங்கி கௌரமான சபையையும், தவிசாளரையும், உறுப்பினர்களையும் அரசாங்கத்திடத்திலும், மக்கள் மத்தியிலும், மோசமான,ஒரு தேச துரோக செயற்பாடாக காட்டி பொதுமக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, பிரதேசத்தின் அபிவிருத்திகள், ஏனய சபையின் முன்னெடுப்புக்கள், பிரதேச சபையின் அரச மானிய உதவிகளை தடை செய்வதற்கான ஒரு சமூக துரோக பதிவும், செயற்பாடுமாகும்.

தொடர்ந்தும் அறிவீனமாக பொய்யான தகவல்களை கூறி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும், இறக்காம பிரதேசத்தையும், முஸ்லிம் சமுகத்தையும், அரசாங்கத்திடம் மோசமாக காட்டிக் கொடுக்கும் சுயநல அரசியலில் இருந்து விலகிக் கொள்ளுமாறும், சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்தும் பொதுமக்களிடத்தில், சபை தொடர்பான பொய்யான தகவல்களை கூறி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரதேச அபிவிருத்திகளுக்கு தடையாக செயற்படுவீர்கள் என்றால் உங்களுக்கு எதிராக பிரதேச சபையால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.






No comments: