News Just In

5/06/2021 09:24:00 PM

மதுபானசாலைகளுக்கு விதிக்கப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல் வெளியாகியது!!


சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மதுவரித்திணைக்களத்தின் அனுமதி பெற்ற சகல இடங்களிலும் செயற்பட வேண்டிய விதம் தொடர்பான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இந்த கோவை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மதுபானசாலைகள் அனுமதி வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மாத்திரம் திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மதுவரித்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள உணவகங்களை இரவு 10 மணியுடன் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் உள்ள மதுபான சாலைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட வேண்டும் என மதுவரித்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனை உரிமம் F.L 4 (வைன் ஸ்டோர்ஸ்), F.L 22 A வகை உரிமம் உள்ள மதுபான சாலைகள் அனுமதி வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மாத்திரம் திறக்கப்படவேண்டும்.

வாடி வீட்டு உரிமம் (F.L 12) பெற்ற மதுபானசாலைகள் இரவு 10 மணியுடன் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹோட்டல் உரிமம் (F.L 7) பெற்றுள்ளவை, தங்கியுள்ள சுற்றுலா பயணிகளுக்காக மாத்திரம் இரவு 10 மணிவரை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதுபானசாலை மற்றும் கள்ளு அருந்தும் இடங்கள் (F.L 5), ஹோட்டல் மதுபான நிலைய விற்பனை உரிமம் (F.L 8), களியாட்ட மதுபான விற்பனை நிலைய உரிமம் (F.L 9), போசன சாலை உரிமம் (F.L 11), விடுதி உரிமம் , F.L 22 B வகை உரிமம் உள்ள மதுபான சாலைகள் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

No comments: