News Just In

5/31/2021 08:11:00 PM

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு உள்வாங்க நடவடிக்கை...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நான்காவது சிகிச்சை விடுதி திறக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு ஆளனிப் பற்றாக்குறை காணப்படும் நிலையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்;கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

2019ம் ஆண்டு ஏப்ரல் குண்டு வெடிப்பிற்கு பிறகு நாட்டில் சுற்றாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம். நாட்டில் பொருளாதாரத்தினை பாதுகாக்க வேண்டும், நாட்டு மக்களை பசி பட்டினி இல்லாமல் பாதுகாக்க வேண்டும், நாட்டில் கொரோனா தொற்றினை இல்லாமல் செய்ய வேண்டும், உதவி செய்யும் நாடுகள் இன்று உதவி செய்ய முடியாது உள்ளது. எவ்வாறு பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவது.

நாட்டினை முடக்கினால் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 73 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது. இரண்டாம் திகதிக்கு பிறகு ஐயாயிரம் வழங்கப்படவுள்ளது. எவ்வளவு நிதிகளை நாங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையில் நான்காவது சிகிச்சை விடுதி திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்குமாக இருந்தால் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் சிகிச்சை விடுதி திறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பிரச்சனைகள் வந்தால்தால் அரசியல் செய்யலாம் என்று சிந்திக்கக் கூடாது. பிரச்சனையை இலகுவாக உண்டுபண்ண முடியும், இதனை தீர்ப்பது கஷ்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார பிரிவில் ஆளனிப்பற்றாகுறை இருந்தும் சுகாதார பிரிவினர் சேவையாற்றி வருகின்றார்கள். இங்கு 27 பேர் உயிரிழந்துள்ளார்கள். அது வேதனையான விடயம். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 18929 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இடம்பெற்றுள்ளது. 19684 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நூறுக்கு மேல் சென்ற கொரோனா தொற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை குறைந்து 93 வந்துள்ளது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நான்காவது சிகிச்சை விடுதி திறக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு ஆளனிப் பற்றாக்குறை காணப்படும் நிலையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்கள் வேறு திணைக்கத்தின் வேலை செய்யும் நிலையில் அவர்களை வைத்தியசாலைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments: