News Just In

5/07/2021 07:33:00 PM

கொரோனா பாதுகாப்பு தீர்மானத்தினை ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தல்!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் வேகமாக பரவிவரும் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தகவல்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது தேவையற்ற விதத்தில் பொருள் கொள்வனவிற்காக கடை தெருக்களுக்கு செல்வதை தவிர்த்தல், வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் உரிய முறைப்படி முகக்கவசம் அணிந்து கொண்டு செல்லல், அடிக்கடி முறையாக 30 செக்கன்கள் கைகளை கழுவிக் கொள்ளுதல் அல்லது தொற்றுநீக்கி பாவித்தல்.

புனித நோன்பு பெருநாள் வருவதனால் பொருட்களுக்காக வெளியிடங்களுக்கு செல்வதை முற்றாகத் தவிர்த்தல். வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்களது வசதிக்கேற்ப நுகர்வோரை உரிய கொவிட் 19 பாதுகாப்புடன் உள்ளெடுத்து தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சகல பொது நிகழ்வுகள், இப்தார் நிகழ்வுகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைகளை மீறுவோருக்கு எதிராக கொவிட்-19 சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்களை பாதுகாக்கும் வகையில் பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வாழைச்சேனை பொலிஸார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயற்படுகின்றது.







No comments: