News Just In

5/01/2021 05:48:00 AM

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பான வழக்கு விசாரணையை முற்றாக இடைநிறுத்துமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது…!!


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் நீதிமன்ற தடையுத்தரவினை மீறியுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கினை முற்றாக இடைநிறுத்துமாறு நேற்று வெள்ளிக்கிழமை (30) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என் றிஸ்வான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இருப்பினும் மேற்படி பேரணியில் நீதிமன்றத் தடையுத்தரவினையும் மீறிச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கருணாகரம், த.கலையரசன், இரா.சாணக்கியன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் மாணவர் மீட்பு பேரவைத் தலைவர் செ.கணேஷ் ஆனந்தம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை நேற்று 30 ஆந் திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதிமன்றினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் மீதான விசாரணை நேற்றைய தினம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளின் சமர்ப்பணத்தின் அடிப்படையில் குறித்த வழக்கினை முற்றாக இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு முதல்நாள் பொலிசார் நீதிமன்றத் தடையுத்தரவினைப் பெற்றிருந்தார்கள். அதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு இந்தப் பேரணியில் கலந்து கொள்பவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவுதான் கொடுக்கப்பட்டிருந்தது. அப்படியான உத்தரவு வழங்கப்பட்டிருந்த வேளையில் அப்பேரணி கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தினூடாகச் செல்லும் போது எவருக்கும் எவ்வித பாதிப்புகளும், சுகாதார பாதிப்புகளும் ஏற்படாத வண்ணமே செயற்பட்டார்கள்.

அதன் பிற்பாடு கல்முனைப் பொலிசார் நிதிமன்றத்திலே வேறுஒரு அறிக்கையைத் தாக்கல் செய்து ஏழு பேரின் பெயர்களைக் கொடுத்து அவர்கள் 02ம் திகதி கொடுக்கப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவினை மீறிச் செயற்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை கொடுக்கப்பட வேண்டும் என்று நீதவான் இல்லாத சமயத்தில் பதில் நீதவானிடத்தில் இருந்து அந்த அழைப்பாணையைப் பெற்றிருக்கின்றார்கள்.

நீதவான் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கினை விசாரிப்பதற்கு எவ்வித நியாயாதிக்கமும் இல்லை. எனவே நேற்றைய தினம் இவ்வழக்கிற்கு எதிராக ஆட்சேபனை மனுவினை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்ததன் அடிப்படையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் நீதிமன்ற தடையுத்தரவினை மீறியுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் கல்முனை நீதவான் நீதிமன்றம் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கட்டளை பிறப்பித்திருந்தது. இக்கட்டளையானது பிரதிவாதிகளின் பிரசன்னம் இல்லாமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதால் மே 18ம் திகதி வரை அழுலில் இருக்கும் அதன் பின்னர் பிரதிவாதிகளின் பிரசன்னத்தின் பின் அது நீடிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கொடுக்கப்பட்ட தடையுத்தரவு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதமன்றப் பதிவாளரூடாகக் கல்முனை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்குத் தொலைபேசியில் அறிவிக்கப்பட்டு இன்று காலை அது தொலைநகலில் அனுப்பி வைக்கப்பட்டும் இருக்கின்றது.

அதனடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் எமுவர் சார்பில் நான் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி பேரின்பராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தோம்.

இதன்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில் பொலிசாரினால் பெறப்பட்ட தடையுத்தரவை மீறி எவரும் செயற்பட்டதாகத் தெரியவில்லை என்றும், அவ்வாறு மீறப்பட்டதாக இருக்கும் விடயங்கள் குறித்து நீதவான் பொலிசாரிடம் விளக்கம் கோரினார். அத்துடன் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைகள் தன்னால் அனுப்பப்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் பொலிசார் இந்த வழக்கை மீளக்கைவாங்க வேண்டும் என்று நாங்கள் எங்கள் சமர்ப்பணத்தை முன்வைத்திருந்தோம். அப்படி பொலிசாரினால் மீளப்பெற முடியுமா என நீதவான் பொலிசாரிடம் வினவிய போது மேலிடத்தின் அறிவுறுத்தலின்படியே இதனை மீளப்பெற முடியும் என்று பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டது.

பிரதிவாதிகளின் சமர்ப்பணங்களுக்கு செவிமடுத்த நீதவான் இந்த வழக்கை முற்றாக இடைநிறுத்தி கட்டளை பிறப்பித்திருக்கின்றார். இவ்வழக்கு இனி எத்திகதியிலும் நீதிமன்றத்திற்கு வரமாட்டாது என்று தெரிவித்தார்.







No comments: