News Just In

5/05/2021 02:20:00 PM

தரம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்ளப்படக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை 40ஆக அதிகரிக்க நடவடிக்கை!!


அடுத்தாண்டு முதல், தரம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்ளப்படக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது 35ஆகக் காணப்படக்கூடிய மாணவர் எண்ணிக்கை, 40 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பிரசித்திபெற்ற பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் காணப்படும் அதிக கேள்வியைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளதெனத் தெரிவித்துள்ள அமைச்சு, இது தொடர்பான சுற்றுநி‌ரூபம், இம்மாதம் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

5 வருடங்களுக்கு முன்னர், முதலாம் தரத்துக்கு இணைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 40ஆகக் காணப்பட்ட நிலையில், பின்னர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, வருடமொன்றுக்கு ஒரு மாணவர் வீதம் குறைக்கப்பட்டு, இறுதியில் 35 மாணவர்களாக உள்ளீர்க்கப்பட்டனர்.

2016இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைமுறை, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவராகக் குறைக்கப்பட்டு, இறுதியாக இவ்வாண்டில், மாணவர் எண்ணிக்கை 35 ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

எனினும் இவ்வரசாங்கம் இந்த எண்ணிக்கையை மீண்டும் 40 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வதிகரிப்புக்கு எதிராக ஆசிரிய தொழிற்சங்கங்கள் உட்பட பல துறை சார் அமைப்புக்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

இது அமுலாகும் போது சிறிய பாடசாலைகளை மூடுவது, வகுப்பறை கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதில் ஆசிரியர் சிக்கல்களை எதிர்கொள்ளல் முதலான பல்வேறு பிரச்சினைகள் எழும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments: