News Just In

5/06/2021 08:32:00 AM

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா- நேற்று மேலும் 1939 பேர் அடையாளம்; 14பேர் உயிரிழப்பு!!


இலங்கையில் நேற்று 1,939 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

தற்சமயம் நாட்டில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 117,529 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களில் 1,897 பேர் புத்தாண்டு கொவிட்-19 கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள்.

அதேநேரம் அண்மையில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 42 நபர்களும் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 922 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதனால் குணமடைந்தவர்களின் தொகையும் 100,075 ஆக உயர்வடைந்துள்ளதுடன், தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 16,734 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட் தொற்று சந்தேகத்தில் 1,343 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை கொவிட்-19 தொற்று தொடர்பாக மேலும் 14 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 734 ஆகும்.



No comments: