News Just In

4/12/2021 08:36:00 PM

அனைத்து சமூகங்களும் ஒற்றுமையோடு வாழவேண்டிய ஒரு படிப்பினையை கடந்த கால வரலாறு எமக்கு விட்டுச் சென்றிருக்கிறது- மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
இந்த நாட்டில் கடந்த முப்பது வருடகாலமாக ஏற்பட்ட சூழ்நிலையானது இப்போது எங்களுக்கு நல்லதொரு அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுத் தந்திருக்கிறது என்று 23 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த தெரிவித்தார்.

உயிர்த்தியாகம் செய்த இராணுவ, பொலிஸ், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து அவர்களின் குடும்பத்தினரை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இன, மத வேறுபாடின்றி அனைத்து சமூகங்களும் ஒற்றுமையோடு வாழவேண்டிய ஒரு படிப்பினையை கடந்த கால வரலாறு இந்த நாட்டு மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறது.

கடந்த பத்து வருட காலத்தில் இந்த நாட்டில் நிலையான அபிவிருத்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற அந்த துயரமான, துக்ககரமான நிகழ்வானது நாங்கள் கட்டி வளர்த்த இந்த நாட்டுக்காக முன்னெடுத்து வந்த சம்பவங்களில் சில சிதைவுகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்தியுள்ளதை மனவேதனையோடு இந்த இடத்தில் தெரிவிக்கிறேன்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நாட்டின் சமாதானத்தையும், சகவாழ்வையும் குலைப்பதற்கு சில புல்லுருவிகள் அல்லது தனி நபர்கள் முயற்சி செய்தனர். இதே போன்ற புல்லுருவிகள் ஏனைய சமூகத்திலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டில் நடைபெற்ற ஏப்ரல் தாக்குதல் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிபலிப்பதல்ல.

எதிர்காலத்தில் எங்களுடைய குழந்தைகளை நிறம், மதம், மொழி என்ற பாகுபாட்டிற்கு அப்பால் நாங்கள் இலங்கையர் என்ற ஒற்றுமையோடு கட்டியெழுப்ப கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், சமாதானத்துக்கும் இந்த நாட்டை பிரிவிலிருந்து காப்பாற்றுவதற்கு தங்களுடைய உயிர்களை தியாகம் செய்த படை வீரர்களை நான் மரியாதையோடு ஞாபகப்படுத்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த கெளரவைத்தயும் தெரிவிக்கிறேன்.

இந்த நாட்டின் சமாதானத்துக்கும் நீடித்த அபிவிருத்திக்கும் அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் நான் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

No comments: