News Just In

4/25/2021 08:28:00 AM

மட்டக்களப்பில் மின்னல் தாக்கத்தில் கால்நடைகளை இழந்த பண்ணையாளருக்கு மாட்டுத் தொழுவம்!!


மட்டக்களப்பு மாவட்ட கால் நடைகள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாகரை மாங்கேணி பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தில் கால்நடைகளை இழந்த பண்ணையாளருக்கு மாட்டுத் தொழுவம் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கால் நடைகள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் திருமதி.உதயராணி குகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சின் செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா, கால் நடைகள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.பாஸி, பார்ம் ஹெமி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உதித வனிகசிங்க, பார்ம் ஹெமி நிறுவனத்தின் வணிக முகாமையாளர் மலக அரவிந்த, திருகோணலை மாவட்ட கால் நடைகள் உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எஸ்.நிசாம்டீன், அம்பாறை மாவட்ட கால் நடைகள் உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.நதீர், கால் நடைகள் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட கால் நடைகள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாகரை மாங்கேணி பிரதேசத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் இருபத்தேழு (27) மாடுகள் உயிரிழந்து காணப்பட்ட நிலையில் மிகுதியான மாடுகளை பராமரிப்பதில் பண்ணையாளர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தார்.

இந்த நிலையில் குறித்த பண்ணையாளரின் மிகுதியான கால்நடைகளை பராமரிக்கும் வகையில் பார்ம் ஹெமி நிறுவனம் மற்றும் கால் நடைகள் உற்பத்தி சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் நிதிப் பங்களிப்பில் மாட்டுத் தொழுவம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாட்டுத் தொழுவம் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கிய பார்ம் ஹெமி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உதித வனிகசிங்க பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.







No comments: