News Just In

4/03/2021 07:14:00 PM

மட்டக்களப்பு- கதிரவெளியில் கச்சான் பதனிடும் நிலையத்தை திறந்து வைத்தார் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கச்சான் செய்கையை மேம்படுத்த இன்னும் நூறு நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளியில் கச்சான் பதனிடும் நிலையம் மற்றும் ஒன்றுகூடல் மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் கொரோனா பாதுகாப்பு பிரச்சனைக்கு மத்தியிலும் அரசாங்கம் மக்களின் தேவைகளை கண்டறிந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. தங்களுடைய கச்சான் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நாங்கள் தற்போது வியாபாரi நிலையங்களை நிறுவி உள்ளோம்.

அதனால் உங்கள் உற்பத்திகைள நாங்களே பெற்றுக் கொள்வோம். நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. தாங்கள் என்னிடம் கோரிய கோரிக்கை அமைவாக இன்னும் நூறு நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். அத்தோடு நூறு விவசாயிகளுக்கு நீர் பாய்ச்சும்; இயந்திரங்களும் வழங்கி வைக்கப்படும்.

இந்த அரசாங்கத்தின் மூலம் மக்களின் தேவைகளை நன்கு அறிந்து கொண்டு சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம். நூறு குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி எமது அரசாங்கம் விவசாயத்தினை ஊக்குவித்துள்ளது என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்தரகாந்தன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா, விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆர்.ஆர்.ஏ,குகான் விஜயகோன், கிழக்கு மாகாண பணிப்பாளர் பி.எம்.என்.தயாரட்ன, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் திருமதி.ராதிகா ரவி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் எஸ்.பேரின்பராசா, வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன் உட்பட திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாகரை பிரதேசத்திலுள்ள ஆறு கச்சான் செய்கை விவசாய சங்கத்திலுள்ள கச்சான் விவசாயிகள் நன்மை கருதி 40 மில்லியன் ரூபாய் நிதி மூலம் கச்சான் உடைக்கும் இயந்திரம், கச்சான் பிரிக்கும் இயந்திரம், உழவு இயந்திரம், நிலத்தினை பதப்படுத்தும் இயந்திரங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

கச்சான் பதனிடும் நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன், கச்சான் நினைவுச் சின்னமும் திறந்து வைக்கப்பட்டதுடன், விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சரால் கேட்டறிந்து கொள்ளப்பட்டது.

விவசாய அமைச்சின் விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் மூலம் 147 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 107 மில்லியன் ரூபாய் செலவில் வாகரை பிரதேசத்திலுள்ள ஆறு கச்சான் செய்கை விவசாய சங்கத்திலுள்ள நூறு விவசாயிகளுக்கு நீர் பாய்ச்சும்; இயந்திரம், தூவல் நீர்பாசனம், கச்சான் விதை உள்ளீடுகள் உட்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டதுடன், விவசாயிகள் போக்குரத்து கருதி உட்கட்டுமான வசதிகளாக பாலம் மற்றும் வீதி என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் அறு நூறு ஏக்கரில் கச்சான் செய்கை செய்யும் விவசாயிகள் விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் மூலம் வழமையான உற்பத்தியை விட முப்பது வீதமான உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன், தங்களது வருமானத்தினையும் அதிகரித்துள்ளதாக நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் திருமதி.ராதிகா ரவி தெரிவித்தார்.

இதேவேளை கச்சான் பதனிடும் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கச்சான் கோது உடைக்கும் இயந்திரத்தின் மூலம் மணித்தியாலயத்திற்கு முன்னூறு கிலோ உடைக்க முடியும் என்னும், இதனால் விவசாயி ஒரு கிலோவிற்கு எண்பது ரூபாய் இலாபம் பெறுகின்றார் என்றும் மேலும் தெரிவித்தார்.


















No comments: