மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் புதனன்று 31.03.2021 மூன்றாவது கொரோனா வைரஸ் மரணம் சம்பவித்துள்ளது.
சுமார் 74 வயதான விவசாயி ஒருவரே நோய்வாய்ப்பட்ட நிலையில் முன்னதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகி அங்கிருந்து வெலிக்கந்தை கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி புதனன்று 31.03.2021 மரணமானார்.
ஏறாவூரில் வியாழக்கிழமை 01.04.2021 வரை ஒரு பெண்ணும் இரு ஆண்களுமாக 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மரணத்தைத் தழுவியுள்ளார்கள்.
மேலும் ஏறாவூரில் சுமார் 79 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா வஸீம் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு - ஓட்டமாவடி சூடுபத்தினசேனை கொரோனா வைரஸ் அடக்கஸ்தலத்தில் கடந்த 05.03.2021 இல் இருந்து வியாழக்கிழமை 01.04.2021 வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மரணித்த 57 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் ஒரு ஆண் ஒரு பெண் உட்பட கத்தோலிக்கர்கள் இருவரின் சடலங்களும் உள்ளடங்கும் என்று ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
No comments: