News Just In

4/30/2021 04:20:00 PM

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 19 கொரோனா நோயாளர்கள்- பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள திட்டம்!!


கொரோனா தடுப்பு செயலணியின் தற்போதைய நிலைமை தொடர்பான விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று (30) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 19 கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு அதில் 5 பேர் செயற்கை சுவாச பிரிவின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்ட வேளை இவர்களுக்கான குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது கரடியனாறு, கல்லாறு மற்றும் காத்தான்குடி ஆகிய கொரோனா சிகிட்சை நிலையங்களில் அதிகளவிலான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்படுமிடத்து மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவலாமெனும் இவ் விடையம் சுகாதாரத் தரப்பினரால் செயலணியின் அவதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் சுகாதாரத் திணைக்களத்தினால் வேறு வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களை அனுமதிப்பதற்கான முன்னாயத்ததினையும் தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அதே வேளை மாணவர்களது கல்வி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்ட போது எதிர் வரும் காலங்களில் தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவகங்களில் உணவுகளை பெற்றுச் செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மதுபான விற்பனை சாலைகள் இயங்குவதற்கும் அதே நேரம் ஹோட்டல்களில் மதுபான வினியோகம் முற்றாக தடைசெய்யவும், பொதுவாக வியாபார ஸ்தலங்களில் மக்களின் நெரிசலை குறைப்பதற்காக ஒரு தடவையில் ஐந்து பேரை மாத்திரம் அனுமதிப்பதற்கும், அத்தோடு சகலவிதமான சுகாதார நடவடிக்கைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் படியும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதற்கும் இதன்போது முடிவுகள் எட்டப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் (Covid - 19) கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவத் தரப்பு பிரதானி பிரிக்கேடியர் எஸ்.ஆர்.ஜீ.கமகே, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் புதிய இராணுவ தரப்பு பிரதானி கேணல் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சினி, உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதேச செயலாளர்களாகிய உ.உதயசிறிதர், வீ.வாசுதேவன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கு.சுஜாத்தா, வைத்திய நிபுணர் சுந்தரேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.









No comments: