News Just In

3/12/2021 09:09:00 PM

மட்டக்களப்பில் விவசாயம் , கால்நடை, சிறு நீர்ப்பாசனம் தொடர்பாக அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம்!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் , கால்நடை, சிறு நீர்ப்பாசனம் தொடர்பாக அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சு மற்றும் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினூடாக அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி. எஸ். அமலநாதன் தலைமையில் இன்று (12) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கடந்த வரவு செலவுத்திட்டத்திற்கமைய பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, திருகோணமலை, அம்பாரை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு பசளை தயாரிப்பு மற்றும் தொடர்பான உபகரணங்கள் கொள்வனவு, பால் உற்பத்தி, ஆடு வளர்ப்பு, இஞ்சி உற்பத்தி, மஞ்சள் உற்பத்தி போன்றவற்றிற்கு தலா 100 மில்லியன் ரூபாயும், உழுந்து உற்பத்தி, பயறு உற்பத்தி போன்றவற்றிற்கு தலா 50 மில்லியன் ரூபாயும் நாடளாவிய ரீதியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பசளை தயாரிப்பு மற்றும் தொடர்பான உபகரணங்கள் கொள்வனவிற்கு 27.5 மில்லியன் ரூபாயும், பால் உற்பத்திக்கு 50 மில்லியன் ரூபாயும், ஆடு வளர்ப்பிற்கு 25 மில்லியன் ரூபாயும், பயறு உற்பத்திக்கு 5 மில்லியன் ரூபாயும், உழுந்து உற்பத்திக்கு 2 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றை நடைமுறைப்படுத்ததுவதற்கான திட்ட முன்மொழிவுகள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் விவசாய, கால்நடை அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளின் கருத்துக்களும் ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் இணைப்புச் செயலாளர் றொஸ்மன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி திணைக்களங்களின் அதிகாரிகள் உட்பட அரச உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.







No comments: